கோதாவரி நீர்ப்பாசன திட்டத்துக்கு ரூ. 500 கோடி மராட்டிய மாநிலத்திற்கு உதவிக்கரம் நீட்டிய ஷிரடி சாய்பாபா அறக்கட்டளை...


கோதாவரி நீர்ப்பாசன திட்டத்துக்கு ரூ. 500 கோடி மராட்டிய மாநிலத்திற்கு உதவிக்கரம் நீட்டிய ஷிரடி சாய்பாபா அறக்கட்டளை...
x
தினத்தந்தி 2 Dec 2018 3:04 PM IST (Updated: 2 Dec 2018 3:04 PM IST)
t-max-icont-min-icon

கோதாவரி நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்ற மராட்டிய மாநில அரசுக்கு ரூ. 500 கோடியை வட்டியில்லா கடனாக வழங்க ஷிரடி சாய்பாபா அறக்கட்டளை முன்வந்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
வடக்கு மராட்டியம் மற்றும் மரத்வாடா பகுதிகளில் இந்த ஆண்டு வழக்கத்தை விட மிக குறைந்த அளவே மழை பொழிவு இருந்தது. இதனால் அந்த பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. சுமார் 5 கிலோமீட்டர் வரை தண்ணீருக்காக கிராம மக்கள் நடந்து செல்வதாக தகவல்கள் வெளியாகின. மரத்வாடா பகுதி மிகவும் வறட்சியானப் பகுதியாகும். மராட்டியத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவான மழைப்பொழிவே பெய்து உள்ளது.

 இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வறட்சி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது என்ற அம்மாநில அரசே தெரிவித்துள்ளது. கோதாவரி ஆற்றில் மரத்வாடா பகுதிக்கு இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை விரைவாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவினாலும்,  நிதிபற்றாக்குறையின் காரணமாக கிடப்பில் போட்டது அரசு. இப்போது அதற்கு உயிர் மூச்சு கிடைத்துள்ளது. விவசாயிகள் பயன் பெறும் வகையிலான இத்திட்டத்தை முன்னெடுக்க நிதிஉதவி வழங்க ஷிரடி அறகட்டளை முன்வந்துள்ளது. இதற்காக 500 கோடி ரூபாய் பணத்தை மராட்டிய அரசுக்கு வட்டியில்லா கடனாக வழங்க முன்வந்துள்ளது.

திட்டத்தை செயல்படுத்திய பிறகு மாநில அரசு கொஞ்சம் கொஞ்சமாக அந்த பணத்தை திரும்பி செலுத்தலாம் என அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அறக்கட்டளையின் அறங்காவலரும்  கையெழுத்திட்டுள்ளனர். மேலும், முதல்கட்ட பணம் ஷிரடி அறக்கட்டளை சார்பில் மராட்டிய மாநில அரசுக்கு வழங்கப்பட உள்ளது.  

Next Story