தலைமை தேர்தல் கமிஷனராக சுனில் அரோரா பொறுப்பு ஏற்றார்


தலைமை தேர்தல் கமிஷனராக சுனில் அரோரா பொறுப்பு ஏற்றார்
x
தினத்தந்தி 3 Dec 2018 5:00 AM IST (Updated: 3 Dec 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

தலைமை தேர்தல் கமிஷனராக சுனில் அரோரா நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். நாடாளுமன்ற தேர்தலை நடத்த தயாராகி வருகிறோம் என்று அவர் கூறினார்.

புதுடெல்லி,

இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ஓ.பி.ராவத் பதவி வகித்து வந்தார். அவருடைய பதவி காலம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) முடிவடைந்தது. இதையொட்டி தேர்தல் கமிஷனர்களில் ஒருவரான 62 வயது சுனில் அரோராவை தலைமை தேர்தல் கமிஷனராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் நியமித்தார்.

இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் தலைமை அலுவலகத்தில் நேற்று தலைமை தேர்தல் கமிஷனராக சுனில் அரோரா பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை இப்பதவியை வகிப்பார். இவர் நாட்டின் 23-வது தலைமை தேர்தல் கமிஷனர் ஆவார்.

இவருடைய தலைமையில்தான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் காஷ்மீர், ஒடிசா, மராட்டியம், ஆந்திரா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது.

பதவி ஏற்ற பிறகு நிருபர்களிடம் சுனில் அரோரா கூறியதாவது:-

நாட்டில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும், நம்பகத்தன்மையுடனும், பாரபட்சம் இன்றியும், நெறிமுறைகளோடு முற்றிலும் அமைதியாக நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் முன்னுரிமை அளிக்கும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் மிகுந்த கவனத்துடன் நடத்தப்படும்.

இதற்காக பொதுமக்கள், தேர்தல் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல் கட்சிகள், ஊடகங்கள், சிவில் சமூக அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் எங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பை அளிக்கவேண்டுகிறோம்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தேர்தல் கமிஷன் இப்போதே தயாராகி வருகிறது.

குறிப்பாக மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் ஒப்புகை சீட்டு எந்திரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைப்பது உள்பட அனைத்துக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தேர்தல் குறித்தும், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் பற்றியும் வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தலில் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த கேள்விக்கு சுனில் அரோரா பதில் அளிக்கையில், “இது தொடர்பாக துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்கா இந்த மாத இறுதியில் அறிக்கை தாக்கல் செய்வார். அதன் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

1980-ம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுனில் அரோரா நிதி, ஜவுளி, திட்டக் கமிஷன் அமைச்சகங்களில் பணியாற்றியவர்.

1999-2002-ம் ஆண்டுகளில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் இணை செயலாளராகவும், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக இயக்குனராக 5 ஆண்டுகளும் பணியாற்றி உள்ளார். 36 ஆண்டுகள் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி தேர்தல் கமிஷனராக அவர் நியமிக்கப்பட்டார்.


Next Story