சபரிமலை தந்திரிகளை விட கழுதைகளுக்கு கருணை அதிகம் : கேரள அமைச்சர் பேச்சால் சர்ச்சை


சபரிமலை தந்திரிகளை விட கழுதைகளுக்கு கருணை அதிகம் : கேரள அமைச்சர் பேச்சால் சர்ச்சை
x
தினத்தந்தி 3 Dec 2018 5:02 AM GMT (Updated: 3 Dec 2018 5:02 AM GMT)

சபரிமலை அய்யப்பன் கோயில் தந்திரிகளை விட அங்குள்ள கழுதைகளுக்கு கருணை அதிகம் என கேரள அமைச்சர் சுதாகரன் பேசி உள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் புகழ் பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்ற நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்தது.இதற்கு எதிராக பல்வேறு பெண்கள் அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நீதிபதிகள் அமர்வு, அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறியது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, பெண்களை அனுமதிக்க கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், சபரிமலை பக்தர்கள், பாஜக உள்பட இந்து அமைப்புகள் பெண்களை அனுமதிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றன. அதேபோல், கோயில் தந்திரி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போதைய தலைமை தந்திரி கன்டரேரு ராஜீவாரு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். 

இந்நிலையில் ஆலப்புழாவில் கலாச்சார விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கேரள பொதுப்பணித்துறை அமைச்சரும் சிபிஐ (எம்) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுதாகரன், கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.  சுதாகரன் கூறுகையில், “சபரிமலையில் உள்ள கழுதைகள் நிறைய வேலைகள் செய்கின்றன. அவைகள் ஒருநாள் கூட போராட்டம் நடத்தியதில்லை. கடுமையான பணிக்கு பிறகு பம்பை நதிக்கரையில் ஓய்வெடுக்கின்றன. அந்த கழுதைகளுக்கு இருக்கும் கருணை கூட சபரிமலை அய்யப்பன் கோயில் தந்திரிக்கு இல்லை. அவர்களுக்கு அய்யப்பன் மீது ஈடுபாடோ அல்லது அக்கறையோ கிடையாது என தெரிவித்துள்ளார்.


Next Story