கீழ் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு அகில இந்திய அளவில் தேர்வு நிதி ஆயோக் பரிந்துரை


கீழ் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு அகில இந்திய அளவில் தேர்வு நிதி ஆயோக் பரிந்துரை
x
தினத்தந்தி 20 Dec 2018 10:00 PM GMT (Updated: 2018-12-21T01:33:29+05:30)

கீழ் கோர்ட்டுகளில் நீதிபதி பதவிக்கு அகில இந்திய அளவில் தேர்வு நடத்த நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.

புதுடெல்லி,

அகில இந்திய நீதித்துறை பணிகள் முறையை கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டது.

ஆனால் 9 ஐகோர்ட்டுகள் இதை ஏற்கவில்லை. 8 ஐகோர்ட்டுகள், அந்த திட்டத்தில் மாற்றங்கள் வேண்டும் என்று கேட்டன. இதையடுத்து அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

கீழ்கோர்ட்டு நீதிபதி பதவி

இப்போது மத்திய திட்ட கமிஷனுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள நிதி ஆயோக் அமைப்பு, கீழ் கோர்ட்டு நீதிபதிகள் பதவிக்கு அகில இந்திய அளவில் தேர்வு நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பாக நிதி ஆயோக் அமைப்பு கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* கீழ் கோர்ட்டு நீதிபதிகள், இந்திய சட்ட சேவை (மத்திய, மாநில அரசுகள்), அரசு வக்கீல்கள், சட்ட ஆலோசகர்கள், சட்ட வரைவாளர்கள் பதவிகளுக்கு அகில இந்திய தேர்வு நடத்த வேண்டும். அந்தப் பொறுப்பை யு.பி.எஸ்.சி. என்னும் மத்திய பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

* இந்த நடவடிக்கையால் இளம் மற்றும் பிரகாசமான சட்ட பட்டதாரிகளை நீதித்துறை பணிக்கு கொண்டு வர முடியும். ஆட்சி அமைப்பில் பொறுப்புணர்வை அதிகரிக்கும்.

* செயல்முறைகளை சீராக்க நீதித்துறையில் நிர்வாக அதிகாரிகளை அறிமுகம் செய்யலாம்.

செயல்திறன் அட்டவணை

* நீதிபதிகள் செயல்திறன் அட்டவணை தயாரிக்கலாம்.

* விரைவாக நீதி வழங்குவதற்கு வசதியாக வீடியோ கான்பரன்ஸ் முறையை (காணொலி காட்சி) எல்லா கோர்ட்டுகளிலும் கொண்டு வரலாம்.

இவ்வாறு நிதி ஆயோக், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அறிக்கை அளித்துள்ளது.

குடிமைப்பணி வயது உச்சவரம்பு

ஐ.ஏ.எஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் என்னும் குடிமைப்பணிகளில் சேருவதற்கு பொதுப்பிரிவினருக்கு தற்போது வயது உச்சவரம்பு 30 ஆக உள்ளது.

இந்த உச்சவரம்பை 27 ஆக குறைக்க வேண்டும். இதை 2022-23 ஆண்டுக்குள் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நிதி ஆயோக் கூறி உள்ளது.

Next Story