இந்தியாவில் வளர்ச்சி - மேம்பாட்டுக்கான குறியீட்டில் தமிழகம் உள்பட 3 மாநிலங்கள் முதலிடம்


இந்தியாவில் வளர்ச்சி - மேம்பாட்டுக்கான குறியீட்டில் தமிழகம் உள்பட 3 மாநிலங்கள் முதலிடம்
x
தினத்தந்தி 22 Dec 2018 8:55 AM GMT (Updated: 2018-12-22T14:25:36+05:30)

இந்தியாவில் வளர்ச்சி - மேம்பாட்டுக்கான குறியீட்டில் இமாச்சலப் பிரதேசம், கேரளம், தமிழகம் ஆகிய 3 மாநிலங்கள் முன்னணி இடங்களை பிடித்துள்ளன.

புதுடெல்லி,

ஒவ்வொரு நாடும் பின்பற்றும் வகையில், நீடித்த வளர்ச்சிக்கான 17 இலக்குகளை ஐ.நா. மாமன்றம் வகுத்துள்ளது. இதில் 13 இலக்குகளின் அடிப்படையில், இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை வரிசைப்படுத்தும் "எஸ்டிஜி இந்தியா குறியீட்டை" நிதி ஆயோக்  வெளியிட்டுள்ளது.

வளர்ச்சி-மேம்பாட்டுக்கான குறியீட்டெண் அடிப்படையிலான இந்த பட்டியலில் இமாச்சலப் பிரதேசம், கேரளம், தமிழகம் ஆகிய 3 மாநிலங்கள் முன்னணி இடங்களை பிடித்துள்ளன.

எஸ்டிஜி இந்தியா குறியீட்டில் இமாச்சலப்பிரதேசமும், கேரளமும் 69 புள்ளிகளை பெற்றுள்ளன. தூய குடிநீர், துப்புரவு, மலைகளின் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பாக இமாச்சலப் பிரதேசத்திற்கு அதிக புள்ளிகள் கிடைத்துள்ளன.

சிறந்த சுகாதாரம், பசிக்கொடுமை ஒழிப்பு, ஆண்-பெண் சமத்துவத்தை எட்டுவது, தரமான கல்வி வழங்குவது தொடர்பாக கேரளம் அதிக புள்ளிகளை பெற்றுள்ளது.

இதற்கடுத்தபடியாக தமிழ்நாடு எஸ்டிஜி இந்தியா குறியீட்டெண்ணில் 66 புள்ளிகளை பெற்றுள்ளது. வறுமை ஒழிப்பு, தூய மற்றும் கட்டுப்படியாகக்கூடிய எரிசக்தி வழங்குவது தொடர்பான இலக்குகளை எட்டுவதில் தமிழகம் அதிக புள்ளிகளை பெற்றுள்ளது.   

மாநிலங்களின் முன்னேற்றத்தின் மூலமே, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை இந்தியா எட்ட முடியும் என்பதால், வளர்ச்சிக்கான போட்டியை உருவாக்க எஸ்டிஜி இந்தியா குறியீட்டெண் வெளியிடப்படுவதாக நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் கூறியுள்ளார்.

Next Story