ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி குறைப்பு டி.வி., கம்ப்யூட்டர், கேமரா, டயர் விலை சினிமா கட்டணம் குறையும் ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது


ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி குறைப்பு டி.வி., கம்ப்யூட்டர், கேமரா, டயர் விலை சினிமா கட்டணம் குறையும் ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
x
தினத்தந்தி 23 Dec 2018 12:15 AM GMT (Updated: 2018-12-23T00:25:27+05:30)

டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் டி.வி., சினிமா டிக்கெட், டிஜிட்டல் கேமரா, கம்ப்யூட்டர் மானிட்டர், டயர் ஆகியவற்றின் மீதான வரி குறைக்கப்பட்டது.

புதுடெல்லி, 

நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த உற்பத்தி வரி, விற்பனை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளுக்கு மாற்றாக ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது.

அதன்படி சரக்கு மற்றும் சேவைகளின் மீது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது. இந்த புதிய வரி விதிப்பு முறை கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்பிறகு பொதுமக்கள், வியாபாரிகள், தொழில்துறையினர், மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று அவ்வப்போது பல்வேறு பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டு உள்ளது.

மும்பையில் கடந்த 18-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, சாதாரண மக்கள் பயன்படுத்தும் 99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31-வது கூட்டம் அதன் தலைவரும், மத்திய நிதி மந்திரியுமான அருண் ஜெட்லி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், வணிக வரித்துறை முதன்மைச் செயலாளர் கா.பாலச்சந்திரன், கூடுதல் தலைமைச் செயலாளர் சோமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியின் சார்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் 23 வகையான பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான ஜி.எஸ்.டி.யை குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

வரி குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விவரம் வருமாறு:-

* 32 அங்குலம் திரை அளவு கொண்ட டி.வி., கம்ப்யூட்டர் மானிட்டர், டிஜிட்டல் கேமரா, ரப்பர் டயர், வீடியோ கேம்ஸ், லித்தியம் பேட்டரி பவர் பேங்க், கியர் பாக்ஸ், கப்பி உருளை (புல்லீஸ்), பரிமாற்ற தண்டு (டிரான்ஸ்மிஷன் சாப்ட்), வளைவு அச்சு (கிராங்க்) ஆகியவற்றின் மீதான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

* மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களின் பாகங்கள் மீதான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

* 100 ரூபாய்க்கு அதிகமான சினிமா டிக்கெட்டுகள் மீது தற்போது 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. இந்த வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் 100 ரூபாய்க்கு குறைவான சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜி.எஸ்.டி. 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

* தக்கை (கார்க்) மற்றும் தக்கையில் செய்யப்படும் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

* ஊன்று கோல், சாம்பல் செங்கல், பளிங்கு கசிவு (மார்பிள் ரப்பிள்) மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

* இசை புத்தகங்கள், வேக வைக்கப்படாத மற்றும் உடனடியாக உண்ண முடியாத டப்பாக்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

* புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் மீதான ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

* அரசு உதவியுடன் சிறப்பு விமானங்களில் சாதாரண வகுப்பில் புனித பயணம் மேற்கொள்வோரின் விமான டிக்கெட் மீதான ஜி.எஸ்.டி. 5 சதவீதமாகவும், உயர் வகுப்பில் பயணம் செய்வோரின் டிக்கெட் மீதான வரி 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டு இருப்பதால் அவற்றின் விலை குறையும்.

* சரக்கு வாகனங்களுக் கான 3-வது நபர் காப்பீடு தொகை மீதான ஜி.எஸ்.டி. 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

* இனி 28 வகையான பொருட்கள் மட்டும் 28 சதவீத ஜி.எஸ்.டி. வரம்புக்குள் இருக்கும்.

* அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்குகள் இனி ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வராது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

* ஜி.எஸ்.டி. ஆண்டு கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வருகிற மார்ச் 31-ந் தேதியில் இருந்து ஜூன் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல்களை கூட்டம் முடிந்ததும் நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் தெரிவித்தார்.

அப்போது அவர் மேலும் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும். வரி குறைப்பின் மூலம் அரசின் வருவாயில் ஆண்டுக்கு ரூ.5,500 கோடி இழப்பு ஏற்படும்.

சிமெண்டு மீது விதிக்கப்படும் 28 சதவீத ஜி.எஸ்.டி.யை குறைப்பது பற்றி அடுத்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஆடம்பர பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான வரி குறைக்கப்படமாட்டாது.

ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட பிறகு ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், அசாம் உள்ளிட்ட 12 மாநிலங்களின் வருவாய் அதிகரித்து உள்ளது. புதுச்சேரி, இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மத்தியபிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் வருவாய் குறைந்து இருக்கிறது. கேரளா, குஜராத் மாநிலங்களின் வருவாய் அதிகரிக்கவில்லை. நிலையாக இருக்கிறது.

வரி வருவாய் நிலவரம் மற்றும் வருவாயை பாதிக்கும் அம்சங்கள் பற்றி ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மந்திரிகள் குழு ஒன்றை அமைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story