அரியானாவில் பனிமூட்டத்தால் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 7 பேர் பலி


அரியானாவில் பனிமூட்டத்தால் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 7 பேர் பலி
x
தினத்தந்தி 24 Dec 2018 8:16 AM GMT (Updated: 2018-12-24T13:46:16+05:30)

அரியானா மாநிலம் ரோஹ்தக்-ரேவரி நெடுஞ்சாலையில் கடும் பனி மூட்டம் காரணமாக, 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 7 பேர் உயிரிழந்தனர்.

சண்டிகர்,

வடமாநிலங்களில் வழக்கத்தை விட தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது.  கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந் தேதி 3.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. அதைவிட குறைவாக நேற்று 3.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று வெப்பநிலை குறைவாக பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வட மாநிலங்களான பஞ்சாப், அரியானா மாநிலங்களில் கடந்த 10 நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. பகல் நேரத்திலும் கடுமையான பனிமூட்டம் காணப்படுவதால், விபத்தை தவிர்ப்பதற்காக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே பயணிக்கின்றனர்.

இந்தநிலையில்,  அரியானா மாநிலத்தில் ரோஹ்தக்-ரேவரி நெடுஞ்சாலையில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின. இதில் 7 பேர் பலியாகி உள்ளனர். 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமான முறையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

முன்னால் சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கியதை அறியாமல், வேகத்தை குறைக்காமல் பின்னால் வந்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது.

Next Story