பொது இடங்களில் தொழுகை நடத்த தடை: உத்தரபிரதேச போலீசுக்கு அசாதுதீன் ஒவைசி கண்டனம்


பொது இடங்களில் தொழுகை நடத்த தடை: உத்தரபிரதேச போலீசுக்கு அசாதுதீன் ஒவைசி கண்டனம்
x
தினத்தந்தி 26 Dec 2018 7:25 AM GMT (Updated: 2018-12-26T12:55:08+05:30)

நொய்டாவில் பொது இடங்களில் தொழுகை நடத்த தடை விதித்த உத்தரபிரதேச போலீசுக்கு அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நொய்டா 

உத்தரபிரதேசம் நொய்டாவில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் இஸ்லாமியர்கள் அங்குள்ள  பொது இடங்களில்  கூடி தொழுகை நடத்துவது வழக்கம். தற்போது  நொய்டா பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் தொழுகை நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

மசூதி, தர்காக்கள் தவிர பொது இடங்களில் தடையை மீறி தொழுகை நடத்தினால் அதற்கு அந்த நிறுவனமே பொறுப்பு எனவும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி வழங்கும்படி சிலர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அனுமதி அளிக்க கலெக்டர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தொழுகை மட்டுமின்றி வேறு எந்த மத நடவடிக்கைகளும் பொது இடங்களில் நடத்த அனுமதி கிடையாது. அதனால் அப்பகுதி நிறுவனங்களில் வேலை செய்யும் இஸ்லாமியர்கள், அங்கு தொழுகை நடத்த அனுமதி கேட்டால் வழங்கக் கூடாது. அது சட்டப்படி குற்றமாகும் என அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவுக்கு  ஆல் இந்தியா மஜ்லீஸ் முஸ்லீமின் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். உத்தரவில் கொடுக்கப்பட்டுள்ள காரணங்கள் மற்றும் பிரார்த்தனை எப்படி அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு  இடையூறாக முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

நீங்கள் என்ன செய்ய முடியும், தவறு உங்களுடையது. சட்டம் மூலம், தங்கள் ஊழியர்களின்  தனிப்பட்ட நடவடிக்கைக்காக  ஒரு எம்.என்.சி. நிறுவனம் எப்படி பொறுப்பு ஏற்கமுடியும் என கேட்டு உள்ளார்.

Next Story