முத்தலாக் விவகாரம்: முஸ்லிம்களின் மத விவகாரங்களில் தலையிடுவதற்கு மெஹ்பூபா முப்தி மத்திய அரசுக்கு எச்சரிக்கை


முத்தலாக் விவகாரம்: முஸ்லிம்களின் மத விவகாரங்களில் தலையிடுவதற்கு மெஹ்பூபா முப்தி மத்திய அரசுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 Jan 2019 11:53 AM IST (Updated: 1 Jan 2019 12:28 PM IST)
t-max-icont-min-icon

முத்தலாக் தொடர்பாக முஸ்லிம்களின் மத விவகாரங்களில் தலையிடுவதற்கு எதிராக காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெஹ்பூபா முப்தி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறையை மேற்கொள்ளும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆணுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமசோதா, கடந்த 17ஆம் தேதி அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. வியாழக்கிழமை அன்று மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 245 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், 11 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் மக்களவையில் மசோதா நிறைவேறியது.

இந்த மசோதாவுக்கு மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி, மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என அறிவித்து உள்ளது.

முத்தலாக் மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் தீர்மானத்திற்கு அதிமுக, திமுக உள்ளிட்ட 11 கட்சிகள் கையெழுத்திட்டு மாநிலங்களவையில் வழங்கி உள்ளன.

நேற்று  மாநிலங்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்த நிலையில், தேர்வுக்குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து  அவை 2-ந்தேதி வரை ஒத்திவைக்கபட்டது.

முத்தலாக் தொடர்பாக  முஸ்லிம்களின் மத விவகாரங்களில் தலையிடுவதற்கு எதிராக காஷ்மீர் முன்னாள் முதல்- மந்திரி மெஹ்பூபா முப்தி  மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மெஹ்பூபா முப்தி கூறி உள்ளதாவது:-

ஒரு முஸ்லிமாக, ஒரு பெண்னாக , முஸ்லிம்களின் குடும்ப கட்டமைப்பில் ஒரு தாக்குதல் நடக்கும்போது பேசுவது எனது கடமையாகும் என்று நான் கருதுகிறேன்.

முஸ்லிம்கள் தங்கள் குடும்ப கட்டமைப்பில் பெருமை கொள்கிறார்கள், இது மிகவும் வலுவாக உள்ளது. மசோதா மூலம் மத்திய அரசு தொந்தரவு செய்ய முயற்சிக்கிறது.

எங்கள் குடும்ப அமைப்பு மிகவும் வலுவாக உள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக, இறைச்சி மற்றும் தோல் மீது தடைகளை விதித்ததன் மூலம் முஸ்லிம் மீது பொருளாதார தாக்குதலை  தொடுத்து உள்ளது. எங்கள் பெண்களை பொருளாதார துயரத்தில் தள்ளி, தற்போது  அவர்கள் (மத்திய அரசு) எங்கள் வீடுகளில் நுழைந்து முத்தலாக் சட்டத்தின்படி, எங்கள் குடும்ப வாழ்க்கையை தொந்தரவு செய்யக்கூடாது.

இருவர் ஒன்றாக வாழ விரும்பவில்லை என்றால், அவர்கள் ஒருமித்த கருத்துக்கு இணங்க வாழலாம். திருமணத்தின் பின் ஒரு பெண் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் பொருளாதாரமாகும்.

முஸ்லிம்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு அளிப்பதை பிஜேபி நிராகரித்தது.  இதுபோன்ற ஒரு சட்டத்தை முன்னிலைப்படுத்துகிறது.  இது மதக்கோட்பாட்டின் அடிப்படையிலானது.

ஜனநாயகம் முரட்டுத்தனமான பெரும்பான்மையினரால் இயங்கவில்லை. அது ஒருமித்த கருத்து.  முஸ்லிம் குடும்பங்களில் பிரிவினை ஏற்படுத்தும் மசோதாவை கொண்டு வருகிறார்கள். 

நகரங்கள் அல்லது தீவுகளின் பெயர்களை மாற்றுதல், வரலாற்றை சிதைப்பது, மாட்டிறைச்சி மற்றும் தோலை தடை செய்தல், இப்போது இந்த தாக்குதல். இந்தியாவிற்கோ, இந்துக்களுக்கோ எந்தவொரு சேவையையும் நீங்கள் செய்யவில்லை என்று மத்திய அரசுக்கு  நான் சொல்ல விரும்புகிறேன். காந்தி இந்தியாவில்  "ஜியா-உல்-ஹக்கின் பாகிஸ்தான் உருவாக்க விரும்பவில்லை. "

முஸ்லிம்களின் மத விவகாரங்களில் மத்திய அரசு  தலையிடுவதை நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில்  பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். நாட்டில் உள்ள  25 கோடி முஸ்லிம்களுக்கு  நீங்கள் என்ன செய்ய  நினைக்கிறீர்கள்.  பாரதீய ஜனதா வாஜ்பாயின் மரபுபடி செயல்படுவதாக நான் நினைக்கவில்லை என கூறினார்.

Next Story