மாயாவதி எச்சரிக்கையை தொடர்ந்து வழக்குகளை வாபஸ் பெற மத்திய பிரதேச அரசு முடிவு
மாயாவதி எச்சரிக்கையை தொடர்ந்து வழக்குகளை வாபஸ் பெற மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
போபால்
ஏப்ரல் 2-ல் நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப் பெறாவிட்டால் வெளியில் இருந்து ஆதரவளிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் எனக் காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
எஸ்சி, எஸ்டி பிரிவினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதை எதிர்த்து ஏப்ரல் இரண்டாம் நாள் வட மாநிலங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின்போது பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தது, வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக பல மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அண்மையில் இராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. ராஜஸ்தானில் 6 தொகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்தில் 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்ற பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வருகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 2-ல் நடைபெற்ற போராட்டத்தின்போது தொடுக்கப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும் என அந்தக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அரசுக்கு ஆதரவளிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாயாவதி எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய பிரதேச அரசு தலித் எழுச்சி போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட அரசியல் வழக்குகளைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
Related Tags :
Next Story