ரபேல் விவாதம்: ஒப்பந்தம் தொடர்பாக பா.ஜனதா கூட்டணி சிவசேனாவும் கேள்வி, பிஜு ஜனதா தளமும் இணைந்தது
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தின் போது மத்திய அரசுக்கு சிவசேனாவும் கேள்வியை எழுப்பியுள்ளது.
புதுடெல்லி,
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பதிலடி கொடுத்தார். தொடர்ந்து மத்திய அரசை தாக்கி எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. பிரான்சின் டசால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு பதிலாக, தனியார் நிறுவனமான அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதை சிவசேனா விமர்சனம் செய்துள்ளது.
மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சியின் உறுப்பினர் அரவிந்த் சாவந்த் பேசுகையில், “இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஎம்டி ரபேல் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கலாம். அரசின் நகர்வு சரியானது கிடையாது. ஒப்பந்தத்திலிருந்து இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை நீக்கியது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுடன் நெருக்கம் காட்டாத ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சியும் விமர்சனம் செய்துள்ளது. “காங்கிரஸ் ஆட்சியின் போது விமானங்களை தயாரிப்பதில் இந்திய கூட்டாளியாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை பிரான்சின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. மிக் மற்றும் சுகோய் விமானங்களை எச்.ஏ.எல். தயாரித்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள், வெளிப்படையான ஒப்பந்தம் அவசியமானது” என கூறியுள்ளது.
Related Tags :
Next Story