இந்த ஆட்சிக்காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் - ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தல்


இந்த ஆட்சிக்காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் - ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Jan 2019 2:15 AM IST (Updated: 3 Jan 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

இந்த ஆட்சிக்காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய இணை பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபளே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்து ராமர் கோவில் கட்டும் திசையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை என்று நாங்கள் கருதுகிறோம்.

நரேந்திர மோடி தலைமையில் 2014-ல் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் கூட, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுகூலமான, அரசியல் சாசன வரம்பிற்கு உட்பட்ட சாத்தியங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வோம் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது. நாட்டு மக்கள் இதில் முழு நம்பிக்கை வைத்து பா.ஜ.க.விற்கு முழு அளவில் ஆதரவு கொடுத்தார்கள். இந்த ஆட்சிக்காலத்தின் போதே அந்த வாக்குறுதியை இந்த அரசு நிறைவேற்றவேண்டும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல விசுவ இந்து பரிஷத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அயோத்தி ராம ஜென்மபூமி பற்றி பிரதமர் தெரிவித்துள்ள கருத்தை அறிந்தோம். ஜென்மபூமி விவகாரம் 69 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையாக இருந்து வருகிறது. மேல் முறையீடுகள் 2011-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருகின்றன. இது அதீதமான தாமதம்.

சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடங்க வெகு காலம் ஆகலாம் என்று கருதுகிறோம். ஒட்டுமொத்த நிலவரத்தையும் பரிசீலித்த பின்னர் எங்களுடைய கருத்துக்களை பதிவு செய்கிறோம். அதாவது, நீதிமன்றம் தீர்வு காணும் என்று சொல்லி இந்துக்கள் நெடுங்காலம் காத்திருக்கவேண்டும் என எதிர்பார்க்க முடியாது.

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் எழுப்ப இப்போதே சட்டம் இயற்றுவதுதான் சரியான வழி. இந்த கோரிக்கையை நிறைவேற்றி கொள்வதற்காக விசுவ இந்து பரிஷத் தனது போராட்டத்தை தொடர்ந்து நடத்தும். இதுதொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து ஜனவரி 31-ந் தேதி பிரயாகையில் நடைபெறும் கும்ப மேளாவில் துறவியர் பேரவை மாநாட்டில் துறவிகள் தீர்மானிப்பார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story