சபரிமலைக்கு பெண்கள் சென்றதை எதிர்த்து கேரளா முழுவதும் போராட்டங்கள் தீவிரம் - இன்று முழு அடைப்புக்கு அழைப்பு


சபரிமலைக்கு பெண்கள் சென்றதை எதிர்த்து கேரளா முழுவதும் போராட்டங்கள் தீவிரம் - இன்று முழு அடைப்புக்கு அழைப்பு
x
தினத்தந்தி 3 Jan 2019 4:45 AM IST (Updated: 3 Jan 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதும் இன்று (வியாழக்கிழமை) முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் நேற்று போராட்டங்கள் நடந்தது.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்ததை எதிர்த்து கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. சபரிமலையிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்ததால் தடை செய்யப்பட்ட வயதுடைய பல பெண்கள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டு இருந்தனர்.

ஆனால் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து (வயது 42), மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா (44) ஆகிய 2 பெண்கள் நேற்று அதிகாலையில் சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர். இந்த சம்பவத்தை முதல்-மந்திரி பினராயி விஜயனும் உறுதி செய்தார்.

இந்த தகவல் மாநிலம் முழுவதும் நேற்று மிக வேகமாக பரவியது. சபரிமலையின் பாரம்பரியத்தை மீறி பெண்கள் தரிசனம் செய்ததற்கு பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மாநிலம் முழுவதும் அந்த கட்சி போராட்டத்தில் இறங்கியது.

தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்துக்கு வெளியே பா.ஜனதாவினர் கண்டன பேரணி நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. ஊடகத்தினர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். கொல்லத்தில் நடந்த போராட்டத்திலும் வன்முறை அரங்கேறியது.

இதைப்போல பத்தனம்திட்டா, கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜனதாவினர் கண்டன பேரணிகளை நடத்தினர். இதில் அய்யப்ப கோஷங்களை எழுப்பியவாறு ஏராளமானோர் கலந்து கொண்டனர். காசர்கோடு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பா.ஜனதாவினர் நடத்திய மறியலால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே குருவாயூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற மாநில இந்து சமய அறநிலையத்துறை மந்திரி கடகம்பள்ளி ராஜேந்திரனுக்கு பா.ஜனதா இளைஞரணியினர் கருப்புக்கொடி காட்டினர். இதைப்போல கண்ணூரில் சுகாதாரத்துறை மந்திரி சைலஜாவுக்கு எதிராகவும் கருப்புக்கொடி காட்டப்பட்டது.

இவ்வாறு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் மற்றும் இந்து அமைப்புகள், சாலைகளில் போக்குவரத்தை மறித்தும், கடைகளை அடைக்க வலியுறுத்தியும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இந்த போராட்டங்களால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளா முழுவதும் இன்று (வியாழக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது.

சபரிமலையில் பெண்கள் தரிசனம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான அரசு அய்யப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக அந்த கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது, முதல்-மந்திரியின் பிடிவாத குணத்தை காட்டுவதாக காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா குறிப்பிட்டு உள்ளார்.


Next Story