கேரளாவில் போராட்டம் தீவிரம்; பா.ஜனதா தொண்டர் உயிரிழப்பு; 10 குறிப்புகள்


கேரளாவில் போராட்டம் தீவிரம்; பா.ஜனதா தொண்டர் உயிரிழப்பு; 10 குறிப்புகள்
x
தினத்தந்தி 3 Jan 2019 10:40 AM GMT (Updated: 3 Jan 2019 10:41 AM GMT)

சபரிமலைக்கு பெண்கள் சென்றதை எதிர்த்து கேரளா முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது.

1) கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனம் செய்வது தடை செய்யப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. 

2) சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தீவிரமாக உள்ளது. ஆனால் பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரசும், பா.ஜனதாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

3) சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்டது. அங்கு பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இந்து அமைப்புகளும், பா.ஜனதாவினரும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு ‘144’ தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. போராட்டம் காரணமாக அங்கு சென்ற பெண்களால் அய்யப்பனை தரிசிக்க முடியவில்லை.

4) இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நேற்று அதிகாலையில் 2 பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை சென்றனர். கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டியை சேர்ந்த கல்லூரி பேராசிரியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டருமான பிந்து (வயது 42) மற்றும் மலப்புரத்தின் அங்காடிபுரத்தை சேர்ந்த ரேஷன் கடை ஊழியரான கனகதுர்கா (44) ஆகிய இருவரும் நேற்று அதிகாலை சுமார் 3.45 மணியளவில் அய்யப்பனை தரிசித்தனர்.

5) பிந்து, கனகதுர்கா ஆகிய இருவரும் சபரிமலையில் அய்யப்பனை தரிசித்ததை முதல்-மந்திரி பினராயி விஜயன் உறுதி செய்தார்.  சபரிமலையில் தரிசனம் செய்த பெண்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

6) பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் போராட்டத்தை தொடங்கினர்.  பா.ஜனதா மாநில தலைவர் பிஎஸ் ஸ்ரீதரன்பிள்ளை பேசுகையில், “நவீன அவுரங்கசீப்தான் பினராயி விஜயன். அவுரங்கசீப் இந்து கோவில்களை அழித்தவர். பெண்கள் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட விதம் திட்டமிட்ட மற்றும் சதித்திட்டமாகும். மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோவிலின் பாரம்பரியத்தை அழித்துவிட்டது. இதற்கு அய்யப்ப பக்தர்களும், பொதுமக்களும் பதிலளிப்பார்கள்,” என்றார்.

7) கோவிலுக்கு சென்ற பெண்கள் பக்தர்கள் கிடையாது, அவர்கள் ஆர்வலர்கள் என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் சென்னிதாலா பேசுகையில், “உண்மையை பினராயி விஜயனே ஒப்புக்கொண்டார். இது கோவில் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் மீது சதிதிட்டம் தீட்டப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகும். பெண்கள் எங்கு தங்கியிருந்தார்கள்? பெண்கள் பினராயி விஜயனின் உத்தரவின்படி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்,” என்றார். 

8) சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளா முழுவதும் இன்று (வியாழக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்தது.

9) மாநிலம் முழுவதும் இந்து அமைப்பினர் தரப்பில் தீவிரமாக போராட்டம் நடைபெற்று உள்ளது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளது. திருச்சூரில் மூன்று பா.ஜனதா தொண்டர்கள் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். பந்தளம் பகுதியில் நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் பா.ஜனதா தொண்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேரணியாக சென்றவர்கள் மீது கற்கள் வீசப்பட்டதில் பலர் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இருவரை போலீஸ் கைது செய்துள்ளது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

10) கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசுகையில், கோவில் தந்திரியால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்றால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்ல விரும்பினால் அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளோம் என வலியுறுத்தியுள்ளார். 

Next Story