எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து


எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து
x
தினத்தந்தி 18 Jan 2019 10:36 PM GMT (Updated: 18 Jan 2019 10:36 PM GMT)

எண்ணூர் துறைமுகம், மாமல்லபுரம் இடையே சென்னை வெளிவட்ட சாலை அமைப்பதற்கு ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம், டெல்லியில் கையெழுத்தானது.

புதுடெல்லி, 

எண்ணூர் துறைமுகத்தையும், கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தையும் இணைக்கிற வகையில் 133.65 கி.மீ. தொலைவுக்கு சென்னை வெளிவட்ட சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிலம் எடுத்தல் உள்ளிட்ட எல்லாவற்றையும் சேர்த்து சுமார் ரூ.12 ஆயிரத்து 300 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சாலை தச்சூர், திருவள்ளூர் பைபாஸ், ஸ்ரீபெரும்புதூர் வழியாக அமைக்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு ரூ.3 ஆயிரத்து 420 கோடி கடன் உதவியை ஜப்பான் வழங்குகிறது.

இதில் ஜப்பான் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு கடன் உதவி என்ற பெயரில் ரூ.2 ஆயிரத்து 470 கோடி கிடைக்கிறது. ரூ.950 கோடி, இந்திய–ஜப்பான் ஒத்துழைப்பு செயல் திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது. இந்தியாவின் சார்பில் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் மகோபாத்ராவும், ஜப்பான் தரப்பில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (ஜிகா) டெல்லி தலைமை பிரதிநிதி காட்சுவோ மேட்சுமோட்டோவும் கையெழுத்திட்டனர்.


Next Story