மம்தா பானர்ஜி கூட்டிய மாநாட்டில் மோடிக்கு எதிராக தலைவர்கள் ஆவேச பேச்சு


மம்தா பானர்ஜி கூட்டிய மாநாட்டில் மோடிக்கு எதிராக தலைவர்கள் ஆவேச பேச்சு
x
தினத்தந்தி 19 Jan 2019 7:45 AM GMT (Updated: 2019-01-19T13:52:27+05:30)

‘ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற தலைப்பில் மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் மாநாட்டில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மோடிக்கு எதிராக ஆவேசமாக பேசி வருகின்றனர்.

கொல்கத்தா,

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அந்த மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில், எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடு இன்று நடைபெறுகிறது.  மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு, தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு முயற்சியாக மேற்கு வங்க முதல் மந்திரியும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா அழைப்பு அனுப்பியுள்ளார்.

அதன்படி  கொல்கத்தாவில் பாஜகவுக்கு எதிராக, மம்தா பானர்ஜி தலைமையில் மாநில எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் ஸ்டாலின், தேவேகவுடா, குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, அரவிந்த கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர் ), மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரஸ்) உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.

முன்னாள் மத்திய மந்திரிகள்  யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி  ஆகியோரும் கலந்து கொண்டனர். ஹிர்த்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி , சத்ருகன் சின்கா  ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

யஷ்வந்த் சின்கா பேசும்போது, "நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கு எதிராக  மட்டுமே மோதிக்கொண்டு இருப்பதாக கூறுவார்கள். இது அதிகாரத்தில் இருந்து ஒருவரை இறக்குவது பற்றி அல்ல. நாம் ஒரு சித்தாந்தத்தை தோற்கடிப்பதற்காக ஒன்றுசேர்ந்து வந்துள்ளோம்" என்று சின்ஹா கூறுகிறார்.

அசாமின் முன்னாள் முதலமைச்சர் ஜிகாங் அபாங் பேசும்போது,

மாநிலம் மோசமான கட்டத்திற்கு செல்கிறது. சிபிஐ அவர்கள்  கைப்பாவையாக உள்ளது. குடியுரிமை மசோதா காரணமாக வடகிழக்கு  பற்றி  எரிகிறது. "டெல்லியில் உள்ளவர்கள்  நாட்டை பிளவுபடுத்துகிறார்கள், இந்த பேரணி இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கட்டும்." என கூறினார்.

குஜராத்தை சேர்ந்த எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி பேசும்போது :-

நாடு முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை சந்தித்து வருகிறது.  அனைத்து கட்சிகளும் பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஐ தோற்கடிக்க ஒன்றாக வர வேண்டும்.

ஹர்த்திக் படேல் பேசும்போது,  சுபாஷ் சந்திர போஸ் பிரிட்டிசாரை  எதிர்த்து போராடினார், நாங்கள் திருடர்களை எதிர்த்து போராடுகிறோம் என கூறினார்.

முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜோரி கூறியதாவது:-

வேறு எந்த அரசாங்கமும் இதைப் போன்ற மக்களுக்கு பொய் கூறியதில்லை, கர்நாடகத்தில் நடப்பது போன்று பாராளூமன்ற தேர்தலிலும்  நடக்கும், எனவே நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் கவனம் இருக்கட்டும். ஒன்றுபட வேண்டும். அர்ஜுனனைப் போல 2019 வாக்கெடுப்பில் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் .ஒவ்வொரு பா.ஜ.க வேட்பாளருக்கு எதிராக ஒரே ஒரு எதிர்க்கட்சி வேட்பாளர் இருக்க வேண்டும்  என கூறினார்.

ராஷ்டீரிய லோக்தள தலைவர் ஜெயந்த் சவுத்திரி  பேசும்போது,  இன்று வங்காளம் என்ன நினைக்கிறதோ, நாளை இந்தியா நினைக்க போகிறது, இன்று மம்தா பானர்ஜி அதை செய்து காட்டி உள்ளார் என கூறினார்.

Next Story