எங்கள் கூட்டணியில் யார் பிரதமர் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள் -அகிலேஷ் யாதவ்


எங்கள் கூட்டணியில் யார் பிரதமர் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள் -அகிலேஷ் யாதவ்
x
தினத்தந்தி 19 Jan 2019 9:16 AM GMT (Updated: 2019-01-19T16:12:56+05:30)

‘ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற தலைப்பில் மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் எங்கள் கூட்டணியில் யார் பிரதமர் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள் என அகிலேஷ் யாதவ் கூறினார்.

கொல்கத்தா,

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அந்த மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில், எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட மாநாடு இன்று நடைபெறுகிறது.  மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு, தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு முயற்சியாக மேற்குவங்க முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா அழைப்பு அனுப்பினார்.

அதன்படி கொல்கத்தாவில் பாஜகவுக்கு எதிராக, மம்தா பானர்ஜி தலைமையில் மாநில எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் ஸ்டாலின், தேவேகவுடா, குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, அரவிந்த கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர்), மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரஸ்) உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.

முன்னாள் மத்திய மந்திரிகள்  யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி  ஆகியோரும் கலந்து கொண்டனர். ஹிர்த்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி , சத்ருகன் சின்கா  ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசும்போது,  இன்று நாட்டின் ஒரு வரலாற்று நாளாகும். அமித்ஷா-மோடி இருவரும் நாட்டை அழிக்கிறார்கள் என கூறினார்.

ஆந்திர முதல் மந்திரி  சந்திரபாபு நாயுடு பேசும்போது, நமது ஒரே நோக்கம்  இந்தியாவை காப்பாற்றுவது, ஜனநாயகத்தை காப்பாற்றுவது ஆகும் என்றார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும்போது,  மத்திய பாஜக அரசு நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டது. மக்களிடையே பாஜக விஷத்தை தூவி வருகிறது. மோடிக்கு பதிலாக நாட்டுக்கு ஒரு புதிய பிரதமர் கிடைப்பார். எங்கள் கூட்டணியில் யார் பிரதமர் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வர்கள் என கூறினார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசும்போது, பிராந்தியத்தில் மக்கள்  மற்றும் அவர்களின் மாநிலங்களின் நலன்களை பாதுகாக்க வலுவான உள்ளுணர்வு வேண்டும்  என கூறினார்.

Next Story