நிதின் கட்காரியை பிரதமராக நிறுத்தினால் கூட்டணி சிவசேனா சொல்கிறது


நிதின் கட்காரியை பிரதமராக நிறுத்தினால் கூட்டணி சிவசேனா சொல்கிறது
x
தினத்தந்தி 23 Jan 2019 1:57 PM GMT (Updated: 23 Jan 2019 1:57 PM GMT)

நிதின் கட்காரியை பிரதமராக நிறுத்தினால் பா.ஜனதாவுடன் கூட்டணி என சிவசேனா கூறியுள்ளது.

மும்பை,

மத்தியிலும், மராட்டியத்தியிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் இருக்கும் சிவசேனா பா.ஜனதாவை கடுமையாக வசைபாடி வருகிறது. ராமர் கோவில் விவகாரம், ரபேல் விவகாரங்களில் பா.ஜனதாவை எதிர்க்கிறது.

ரபேல் விவகாரத்தில் பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையை கோருகிறது. சிவசேனா காட்டமாக பேசும் நிலையில் தனியாக போட்டியிடவும் தயாராக வேண்டும் என பா.ஜனதா தொண்டர்களுக்கு அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். சிவசேனாவும் போட்டிக்கு தயார் என்றது. சிவசேனா கூட்டணியிலிருந்து விலகுவதை பா.ஜனதா விரும்பவில்லை. எப்படியாவது கூட்டணிக்கு வரும் என்ற நிலையிலே உள்ளது. சிவசேனாவும் ஆட்சி அதிகாரம் என்ற நிலையில் இப்போது உள்ளது. 

இந்நிலையில் நிதின் கட்காரியை பிரதமராக நிறுத்தினால் பா.ஜனதாவுடன் கூட்டணி என சிவசேனா கூறியுள்ளது.

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பேசுகையில், “கூட்டணி என்ற வார்த்தை சிவசேனாவின் அகராதியிலிருந்து நீங்கவில்லை. பா.ஜனதா அதைப்பற்றி சிந்திக்கிறது, நாங்கள் எங்களைப்பற்றி யோசிக்கிறோம். நிதின் கட்காரியை பா.ஜனதா பிரதமராக நிறுத்தினால் நாங்கள் ஆதரவு தெரிவிக்க அஞ்சமாட்டோம்,” என கூறியுள்ளார். சமீபத்தில் பா.ஜனதா தொண்டர்களிடம் நிதின் கட்காரி பேசுகையில், பிரதமர் மோடியை பிரதமராக்க பணியாற்ற வேண்டும் என்றார். இதற்கிடையே சஞ்சய் ராவத் பேசுகையில், “மோடி அரசுக்கு எதிராக அமையும் மகா கூட்டணியில் காங்கிரஸ் இல்லையெனில் வெற்றி கிடையாது,” என்று கூறியுள்ளார்.

Next Story