பிரியங்கா அரசியல் வருகை காங்கிரசுக்கு திருப்புமுனையை ஏற்படுத்துமா?


பிரியங்கா அரசியல் வருகை காங்கிரசுக்கு திருப்புமுனையை ஏற்படுத்துமா?
x
தினத்தந்தி 24 Jan 2019 12:44 PM GMT (Updated: 24 Jan 2019 12:44 PM GMT)

பிரியங்கா அரசியல் வருகை காங்கிரசுக்கு திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும் ஏற்பட்டு உள்ளது.

லக்னோ

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி,  அக்கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1972-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி ராஜிவ் காந்தி-சோனியா தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர் பிரியங்கா காந்தி. பிரியங்கா காந்தி டெல்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர். இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டப் பின்னர் பாதுகாப்புக் காரணங்களால் பிரியங்கா பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றார் பிரியங்கா.

புத்த மதத்தைப் பின்பற்றும் பிரியங்கா, புத்த கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். தனது பாட்டி இந்திரா காந்தியின் தோற்றத்திலேயே தான் இருப்பதை நினைத்துப் பெருமைகொள்ளும் பிரியங்கா, தனது பாட்டி அணிந்த சேலைகளை எல்லாம் பாதுகாப்பாக வைத்திருக்கிறாராம்.

1997-ம் ஆண்டு தனது நண்பர் ராபர்ட் வதேராவை திருமணம் செய்துகொண்ட பிரியங்காவுக்கு மிராயா, ரய்ஹான் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

16 வயதில் தனது முதல் பொது உரையை நிகழ்த்திய பிரியங்கா, தனது 47-வது வயதில் அரசியலில் இணைந்துள்ளார்.

நேரடி அரசியலுக்கு வந்துள்ள பிரியங்காவை வருகிற பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இப்போதே அழைப்பு விடுக்கத் தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரியங்காவை எந்த தொகுதியில் களம் இறக்கலாம் என்ற ஆலோசனை நடந்து வருகிறது.

பிரியங்காவை பொருத்தவரை அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல தொடர்பில் இருப்பவர். அந்த இரு தொகுதிகளிலும் அவருக்கு அபரிமிதமான செல்வாக்கு இருக்கிறது.

இதில் அமேதி தொகுதியில் ராகுல் கடந்த 2004-ம் ஆண்டு முதல் எம்.பி. ஆக இருந்து வருகிறார். எனவே நான்காவது முறையாக அவர் அமேதியில் போட்டியிட உள்ளார்.

சோனியாகாந்தி ரேபரேலி தொகுதியில் எம்.பி. ஆக உள்ளார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக இந்த தடவை அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்ற பேச்சு நிலவுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ரேபரேலி தொகுதியில் பிரியங்காவை போட்டியிட வைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

ரேபரேலி தொகுதியில் பிரியங்காவின் வெற்றி 100 சதவீதம் உறுதியானதாகும். அத்தகைய சூழ்நிலையில் அவர் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 33 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா 5 முறை எம்.பி. ஆக இருந்துள்ளார். அந்த 5 தடவையும் தேர்தல் பணி செய்தது பிரியங்காதான். எனவே ரேபரேலி தொகுதியைப் பற்றி பிரியங்காவுக்கு தெரியும். இது பிரியங்காவின் மிகப்பெரிய பலமாகும். உபி கிழக்கு 47 மாவட்டங்கள் அடங்கியதாகும். 33 பாராளுமன்ற தொகுதிகளும் இதில் அடக்கம். கடந்த 2014 ஆம் ஆண்டு வாரனாசி அசம்கர், அமேதி, ராய் பரேலி மற்றும் கன்னுஜ் ஆகிவற்றைத் தவிர்த்து, மற்ற தொகுதிகளில் பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டாளியான அப்னா தளம் வெற்றி பெற்றனர். உ.பி., கிழக்கு மண்டலத்தை பொறுத்த வரை காங்கிரசுக்கு  போதிய செல்வாக்கு இல்லை.

உத்தரபிரதேசத்தில் 1984 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றது இல்லை. இதனை பிரியங்கா காந்தி மாற்றுவாரா?

சிறுபான்மையினர், உயர் ஜாதிகள், ஜாதவ், தலித் அல்லாதவர்கள், யாதவ் அல்லாத ஓபிசி.,க்கள் ஆகியோரை குறிவைத்து பிரியங்கா பணியாற்ற உள்ளார் என முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் கூறுகிறார். ராகுலுக்கு எதிரானவர்கள் யார் என்பதை பட்டியலிட்டு, நாடு முழுவதும் பிரியங்கா பிரசாரம் செய்ய உள்ளாராம்.

Next Story