கூகுள் மேப் உதவியுடன் 11 கோவில்களில் கொள்ளை அடித்த கும்பல்

கர்நாடகாவில் கூகுள் மேப் உதவியுடன் 11 கோவில்களில் கும்பல் ஒன்று கொள்ளை அடித்து சென்றுள்ளது.
மைசூரு,
நம் அன்றாட வாழ்க்கையில் தொழில் நுட்பம் பல விசயங்களை எளிமையாக்கி உள்ளது. வீட்டில் இருந்து கொண்டு ஆன்லைன் வழியே ஆர்டர் செய்து உணவை வரவழைத்து கொள்ளலாம். புதிய இடம் ஒன்றிற்கு செல்ல வேண்டுமெனில் அதற்கு என கூகுள் மேப் உதவியை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆனால், கோவிலுக்கு சென்று கொள்ளை அடிப்பதற்கு வழிகாட்டியாக கொள்ளையர்கள் கூகுள் மேப் பயன்படுத்தி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
கர்நாடகாவின் மைசூரு மற்றும் சாம்ராஜநகர் மாவட்டங்களில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கோவில்களில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு உள்ளது. 19 முதல் 26 வயது கொண்ட அவர்கள் கடந்த செப்டம்பரில் இருந்து 5 மாதங்களாக கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்காக பக்தர்கள் அதிகம் வராத கோவிலை தேர்வு செய்து உள்ளனர். இதன்பின் உள்ளடங்கிய பகுதிகளில் அமைந்த கோவிலுக்கு கூகுள் மேப்பின் உதவியுடன் சென்று கொள்ளை அடித்துள்ளனர். இதுவரை மைசூரு நகரில் 2 கோவில்களிலும், சாமராஜநகரில் 9 கோவில்களிலும் இருந்து ரூ.2.9 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தொழில் முறை கொள்ளைக்காரர்கள் அல்ல. வேறு வேறு வேலையில் ஈடுபட்டிருந்த இந்த 5 பேரும் கோவிலில் கொள்ளை அடிப்பதற்காக ஒன்று சேர்ந்துள்ளனர்.
இதுபற்றி தொடர்ந்து வந்த புகார்களை அடுத்து சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டது. தீவிர கண்காணிப்பிற்கு பின் இந்த கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளது. இவர்களிடம் இருந்து விலை மதிப்பு மிக்க சந்தன கட்டை உள்ளிட்ட பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story