6 மாதங்களில் 10 பேரை கொலை செய்த சீரியல் கொலையாளி கும்பமேளாவில் கைது

உத்தரபிரதேச மாநிலத்தில் 6 மாதங்களில் 10 பேரை கொலை செய்த சீரியல் கொலையாளியை போலீசார் கும்பமேளாவில் கைது செய்துள்ளனர்.
அலகாபாத்,
அலகாபாத்தில் பொது இடங்களில் இரவு தூங்குபவர்கள் தொடர்ச்சியாக கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு வந்தனர். இது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சியை மேற்கொண்டனர். இருப்பினும் பொதுஇடங்களில் தூங்கும் தொழிலாளிகள் கொலை செய்யப்படுவது தடைப்படவில்லை. சீரியல் கொலையாளி ஜனவரி 10-ம் தேதி கைத்காஞ் பகுதியில் திரிவேனி தர்ஷன் ஓட்டல் பகுதியில் ஒருவரை இரவு நேரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான்.
ஜனவரி 18-ம் தேதி சாலையோர நடைபாதையில் படுத்து உறங்கிய மூவரை கொடூரமாக தாக்கியுள்ளான். சமீபத்தில் கும்பமேளா பகுதியிலும் இரவு நேரத்தில் ஒருவரை கொலை செய்துள்ளான். இந்த கொலைகள் தொடர்பாக விசாரித்த போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கொலையாளி அடையாளம் காணப்பட்டான். இதனையடுத்து அவனை தேடிய போலீசார் கும்பமேளா நடக்கும் பகுதியில் கைது செய்துள்ளனர். அவன் ஏன் இவர்களை கொலை செய்தான் என்பது தெரியவரவில்லை.
இவனால் தாக்கப்பட்ட மூவர் மருத்துவமனையில் உயிருக்காக போராடி வருகிறார்கள். கடந்த ஆண்டு ஜூலையில் இருந்து இதுவரையில் 10 பேரை கொலை செய்துள்ளான். அவனிடம் இருந்து கூர்மையான ஆயுதம், மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைக்கொண்டே அனைவரையும் கொலை செய்துள்ளான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story