கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக சன்னியாசிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை பாபா ராம்தேவ் குற்றச்சாட்டு


கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக சன்னியாசிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை பாபா ராம்தேவ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 27 Jan 2019 1:39 PM GMT (Updated: 2019-01-27T19:09:04+05:30)

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக சன்னியாசிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை என்று பதஞ்சலி நிறுவனரும், யோகா குரு பாபா ராம்தேவ் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

சமூகம், பொருளாதாரம், கலை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு தேர்ந் தெடுத்து பத்ம விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டன. இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதும் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. 

பத்ம விருதுகள் 112 பேருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு உள்ளது.

விருது பெற்றவர்களில் 21 பேர் பெண்கள். 11 பேர் வெளிநாட்டில் வசிப்பவர்கள். திருநங்கை ஒருவருக்கும் விருது கிடைத்து இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா இந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மறைந்த பாரதீய ஜனசங்க தலைவர் நானாஜி தேஷ்முக், மறைந்த பிரபல பாடகர் புபேன் ஹசாரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இவர்களில் நானாஜி தேஷ்முக், புபேன் ஹசாரியா ஆகியோருக்கு, மறைவுக்கு பின் இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது.


இது குறித்து தற்போது வாரணாசியில் இருக்கும் யோகா குரு பாபா ராம் தேவ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

சமீபத்தில் மத்திய அரசு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது, பம்தவிபூஷன், பத்மபூஷன் விருதுகளை அறிவித்துள்ளது. விருதுக்காக அறிவிக்கப்பட்டவர்களை நான் மதிக்கிறேன். அவர்களின் சேவைகள், பணிகள் ஆகியவற்றிக்கு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளதை ஏற்கிறேன். 

விளையாட்டு வீரர்களுக்கும், கலைஞர்களுக்கும் பத்ம விருதுகள், பாரத ரத்னா விருதுகள் அளிக்கும் போது ஏன் துறவிகளுக்கு அளிக்கப்படுவதில்லை. தயானந்த சரஸ்வதி சுவாமி, சுவாமி விவேகானந்தர் இந்த சமுதாயத்திற்கு அளித்த பங்களிப்புகளைக்காட்டிலும் அரசியல்வாதிகள், கலைஞர்கள் பங்களிப்பு செய்து விட்டார்களா? 

அன்னை தெரசாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கி உள்ளது அரசு. ஏனென்றால் அவர் ஒரு கிறிஸ்துவர், ஆனால் சாதுக்களுக்கும், துறவிகளுக்கும் பாரத ரத்னா விருது இல்லை. 

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக சன்னியாசிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை.

சுவாமி விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி சுவாமி, சிவக்குமார சுவாமி ஆகியோருக்கு ஏன் வழங்கப்படவில்லை. இந்த துறவிகள் சமூகத்துக்கு ஏராளமான சேவைகளையும், நற்பணிகளையும் செய்துள்ளார்கள், இவர்களுக்கு கண்டிப்பாக பாரத ரத்னா அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story