தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக விவசாயக் கடன் தள்ளுபடியென காங்கிரஸ் வாக்குறுதியளிக்கிறது - பிரதமர் மோடி


தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக விவசாயக் கடன் தள்ளுபடியென காங்கிரஸ் வாக்குறுதியளிக்கிறது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 3 Feb 2019 4:05 PM IST (Updated: 3 Feb 2019 4:48 PM IST)
t-max-icont-min-icon

தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காகவே விவசாயக் கடன் தள்ளுபடியென காங்கிரஸ் வாக்குறுதியளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

லடாக்,

2019-2020-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  2 ஹெக்டேருக்கும் (சுமார் 5 ஏக்கர்) குறைவான சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். இந்த தொகை 3 தவணைகளாக அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும்.  இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும். 

இந்த நிதி ஆண்டில் (2019-2020) மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி செலவாகும் என்றும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  ‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட இருக்கிறது.

காஷ்மீர் மாநிலம் லடாக் சென்றுள்ள பிரதமர் மோடிபேசுகையில் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தார். லடாக்கில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசுகையில், “பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் முற்றிலும் விவசாயிகளுக்கான திட்டமாகும்.  தொலை தூரத்தில் மட்டும் கடினமான இடங்களில் உள்ள சிறு விவசாயிகளுக்கு ரூ. 6000 வழங்கப்படுவதால் உள்ள நன்மை டெல்லியில் ஏசியில் இருப்பவர்களுக்கு தெரியாது.  

தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக மட்டுமே விவசாயக் கடன் தள்ளுபடியென காங்கிரஸ் வாக்குறுதியளிக்கிறது. 2008-09ல் விவசாயிகளின் ரூ. 6 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் வாக்குறுதியளித்தது, ஆனால் 52 ஆயிரம் கோடி கடனை மட்டுமே தள்ளுபடி செய்தது. அனைவருக்கும் வங்கிக்கணக்கு திட்டத்தின் பயன் என்ன என்பதை அவர்கள் இப்போது உணர்ந்து இருப்பார்கள். பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 75 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு நேரடியாக செல்லும்,” என கூறியுள்ளார். 

Next Story