தேசிய செய்திகள்

மத்திய அரசுக்கு எதிரான மம்தாவின் தர்ணா போராட்டம் நீடிப்பு + "||" + West Bengal Chief Minister Mamata Banerjee at 'Save the Constitution' dharna in Kolkata

மத்திய அரசுக்கு எதிரான மம்தாவின் தர்ணா போராட்டம் நீடிப்பு

மத்திய அரசுக்கு எதிரான மம்தாவின் தர்ணா போராட்டம்  நீடிப்பு
மத்திய அரசுக்கு எதிரான மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் 2-வது நாளாக நீடித்து வருகிறது.
கொல்கத்தா, 

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இரு வழக்குகள் தொடர்பாக மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐஅதிகாரிகள் நேற்று அவரது வீட்டுக்கு சென்றனர்.

அப்போது கமிஷனரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் போலீஸார், சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். இதனிடையே மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரடியாக போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு வந்தார்.  இதைத்தொடர்ந்து அவர் மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தர்ணாவில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இந்த நிலையில், மம்தா பானர்ஜி தொடர்ந்து 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் பெருமளவில் கூடியுள்ளனர். 

அனைத்து எதிர்க்கட்சிகளும் எனக்கு ஆதரவாக உள்ளன என்று மம்தா பானர்ஜி ஊடகங்களில் பேசுகையில் தெரிவித்தார். சிபிஐ- மேற்கு வங்காள அரசு இடையேயான மோதல் இன்று பாராளுமன்றத்திலும் புயலை கிளப்பும் என தெரிகிறது.  இன்று காலை 10.30 மணியளவில் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.