அரசியல் அமைப்பு பாதுகாக்கப்படும் வரை எனது சத்தியாகிரக போராட்டம் தொடரும்: மம்தா பானர்ஜி ஆவேசம்


அரசியல் அமைப்பு பாதுகாக்கப்படும் வரை எனது சத்தியாகிரக போராட்டம் தொடரும்: மம்தா பானர்ஜி ஆவேசம்
x
தினத்தந்தி 4 Feb 2019 12:20 PM IST (Updated: 4 Feb 2019 12:20 PM IST)
t-max-icont-min-icon

அரசியல் அமைப்பு பாதுகாக்கப்படும் வரை எனது சத்தியாகிரக போராட்டம் தொடரும் என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்தார்.

கொல்கத்தா, 

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இரு வழக்குகள் தொடர்பாக மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரது வீட்டுக்கு சென்றனர்.

அப்போது கமிஷனரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் போலீஸார், சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். இதனிடையே மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரடியாக போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு வந்தார். இதைத்தொடர்ந்து அவர் மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தர்ணாவில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்த நிலையில், மம்தா பானர்ஜி தொடர்ந்து 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான்  இறப்பதற்கு தயாராக இருக்கிறேன், ஆனால் ஒருபோதும் மோடி அரசுக்கு அடிபணிய மாட்டேன். நாட்டில் அவசரநிலையை அமல்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தேசத்தை, ஜனநாயகத்தை, அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் வரையில் எனது சத்தியாகிரகப் போராட்டம் தொடரும்.

இந்தப் போராட்டம் எனது கட்சி நடத்தும் போராட்டம் அல்ல, எனது அரசு நடத்தும் போராட்டம். நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் நான் துணை இருப்பேன். நான் எந்த அதிகாரிகளுக்கும் எதிரானவர் இல்லை. அதனால்தான் சிபிஐ அலுவலகத்தைவிட்டு, மெட்ரோ ரயில்நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளேன்” என்றார்.

Next Story