தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல் காந்தி இந்த மாதம் தமிழகம் வருகை; கே.எஸ். அழகிரி பேட்டி
தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல் காந்தி இந்த மாதம் தமிழகம் வருகிறார் என கே.எஸ். அழகிரி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக திருநாவுக்கரசர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து வந்த நிலையில், அக்கட்சியின் புதிய தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டார்.
மேலும், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்களாக எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரை கட்சி மேலிடம் நியமித்தது.
கே.எஸ்.அழகிரி, கடந்த 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 1996-ம் ஆண்டு தேர்தலில், அவர் த.மா.கா. சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார். இந்த நிலையில், கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ். அழகிரி, டெல்லியில் ராகுல் காந்தியை இன்று சந்தித்து பேசினார். அவருடன் செயல் தலைவர்கள் 4 பேர் உடன் சென்றனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, தமிழக அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் பேசினேன்.
கருத்து வேறுபாடுகள் இல்லாத கட்சி இந்தியாவில் எங்கேயாவது உள்ளதா? தமிழக காங்கிரசிலும் கருத்து வேறுபாடுதான் உள்ளது. கோஷ்டி பூசல் இல்லை என கூறினார்.
அதன்பின்னர் அவர், தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல் காந்தி இந்த மாதம் தமிழகம் வருகிறார். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
Related Tags :
Next Story