மேற்கு வங்காள விவகாரத்தால் பாராளுமன்றத்தில் 2-வது நாளாக கடும் அமளி


மேற்கு வங்காள விவகாரத்தால் பாராளுமன்றத்தில் 2-வது நாளாக கடும் அமளி
x
தினத்தந்தி 5 Feb 2019 7:04 AM GMT (Updated: 5 Feb 2019 7:04 AM GMT)

மேற்கு வங்காள விவகாரத்தால் பாராளுமன்றத்தில் 2-வது நாளாக கடும் அமளி ஏற்பட்டது.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தை உலுக்கிய சாரதா நிதி நிறுவன ஊழல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர்களை தடுத்து நிறுத்திய மாநில போலீசார், சில அதிகாரிகளை போலீஸ் நிலையத்திற்கும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த மோதல் தொடர்பாக தகவல் அறிந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ராஜீவ் குமாரின் வீட்டுக்கே சென்றார். அப்போது மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவர், அரசியல் சாசனத்தை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டு உள்ளார். மேற்கு வங்காளத்தில் நேற்று முன்தினம் அரங்கேறிய இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தால் நேற்று பாராளுமன்றம் முடங்கியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியால் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் பாராளுமன்றத்தில் கடும் அமளி நிலவியது. குறிப்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். உடனே குறுக்கிட்ட மக்களவை சபாநாயகர், உச்சநீதிமன்றம் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லை. சிபிஐ மீதும் நம்பிக்கை இல்லை. இது போன்று நடந்து கொள்ளக் கூடாது. வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது. எனவே, பாராளுமன்றத்தை செயல்பட அனுமதியுங்கள். அனைத்து அமைப்புகளும் தங்கள் பணிகளை மேற்கொள்ள விடுங்கள் என கூறியதோடு அவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார். அதேபோல், மாநிலங்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Next Story