சீனாவை கேள்வி கேட்க தயாரா? பிற நாடுகளின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுகிறது இந்தியா குற்றச்சாட்டு


சீனாவை கேள்வி கேட்க தயாரா? பிற நாடுகளின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுகிறது இந்தியா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Feb 2019 11:45 PM GMT (Updated: 2019-02-15T13:02:39+05:30)

பிற நாடுகளின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுகிறது என்று இந்தியா குற்றம் சாட்டியது.

புதுடெல்லி, 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் அளித்த பேட்டியில், “இந்தியாவைப் போல் நாங்கள் சிறுபான்மையினரை இரண்டாம்தர குடிமக்களாக நடத்த மாட்டோம்” என்று கூறினார்.

அதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. “இம்ரான்கான் கருத்து, இந்திய குடிமக்கள் அனைவரையும் அவமதிக்கக்கூடியது. இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை அவர் சரிவர புரிந்து கொள்ளவில்லை” என்று இந்தியா பதிலடி கொடுத்தது.

இதற்கிடையே, சீனாவின் வடமேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை ‘உய்குர்’ இன முஸ்லிம்களை சீன அரசு தடுப்புக்காவல் முகாம்களில் அடைத்து வைத்திருப்பதாக துருக்கி அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஸ் குமாரிடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், சீனாவை எதிர்த்து கேள்வி கேட்க தயாரா? என்பதுபோல் பாகிஸ்தானை விமர்சித்தார். ரவீஸ் குமார் கூறியதாவது:-

பொதுவாக, பிற நாடுகளின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து கூறுவதில்லை என்பது நாம் பின்பற்றி வரும் பழக்கம். ஆனால், அதற்கு மாறாக, பாகிஸ்தானும், அதன் தலைமையும் நடந்து வருகின்றன.

அவர்கள்தான் இந்தியாவில் சிறுபான்மையினர் நிலை பற்றி பேசுவதுடன், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் உள்விவகாரங்களில் தொடர்ந்து தலையிட்டு வருகிறார்கள். எனவே, இந்த கேள்வியை பாகிஸ்தானிடம் கேளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story