டெல்லி-வாரணாசி செல்லும் வந்தேபாரத் விரைவு ரெயில் வர்த்தக ஓட்டம் தொடங்கியது


டெல்லி-வாரணாசி செல்லும் வந்தேபாரத் விரைவு ரெயில் வர்த்தக ஓட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 17 Feb 2019 3:58 AM GMT (Updated: 2019-02-17T09:28:47+05:30)

டெல்லி-வாரணாசி செல்லும் வந்தே பாரத் விரைவு ரெயில் வர்த்தக ஓட்டம் இன்று தொடங்கியது.

புதுடெல்லி,

டெல்லி-வாரணாசி இடையே வந்தேபாரத் விரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த வெள்ளி கிழமை தொடங்கி வைத்துள்ளார்.  சென்னை ஐ.சி.எப். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 18 மாதத்தில் கடந்த 2018ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த ரெயில் முதலில் ரெயில் 18 என அழைக்கப்பட்டது.  அதன்பின் அதற்கு வந்தேபாரத் விரைவு ரெயில் என பெயர் சூட்டினர்.

நாட்டில் தற்போது இயக்கத்தில் உள்ள சதாப்தி போல, பெருநகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரெயில்களுக்கு பதிலாக இந்த புதுவடிவ ரெயில் இயக்கப்பட உள்ளது. என்ஜின் இல்லாமல் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரெயில் அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும்.

இந்த ரெயிலில் உள்ள 16 பெட்டிகளும் குளிர்சாதன வசதியுடன் கூடிய அமரும் இருக்கைகள் (ஏ.சி. சேர் கார்) கொண்டவை ஆகும். வை-பை வசதி, ஒவ்வொரு இருக்கையின் கீழ் செல்போனை சார்ஜ் செய்யும் வசதி மற்றும் சாய்வு வசதி கொண்ட உட்காரும் இருக்கைகள், விமானங்களில் இருப்பது போல் படிப்பதற்கு உதவும் சுழலும் விளக்குகள், பயோ கழிப்பறைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

எனினும், வாரணாசியில் இருந்து இந்த ரயில் திரும்பி வந்து கொண்டிருந்தபொழுது பழுதானது.  அதன்பின் சரி செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது.

இந்த நிலையில், டெல்லி-வாரணாசி செல்லும் வந்தே பாரத் விரைவு ரெயில் வர்த்தக ஓட்டம் இன்று தொடங்கியது.

இதுபற்றி மத்திய ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், டெல்லியில் இருந்து வாரணாசி நோக்கி வந்தே பாரத் விரைவு ரெயில் இன்று காலை புறப்பட்டு சென்றது.  அதன் வர்த்தக ஓட்டம் தொடங்கியுள்ளது.  அடுத்த இரு வாரங்களுக்கான பயண சீட்டுகள் விற்கப்பட்டு விட்டன.  உங்களுக்கான டிக்கெட்டுகளையும் இன்றே வாங்குங்கள்! என தெரிவித்துள்ளார்.

Next Story