1999-ல் கந்தகாரில் மசூத் அசாரை விடுதலை செய்தது யார்? நவ்ஜோத் சிங் சித்து கேள்வி


1999-ல் கந்தகாரில் மசூத் அசாரை விடுதலை செய்தது யார்? நவ்ஜோத் சிங் சித்து கேள்வி
x
தினத்தந்தி 18 Feb 2019 10:17 AM GMT (Updated: 2019-02-18T15:47:59+05:30)

1999-ல் கந்தகாரில் மசூத் அசாரை விடுதலை செய்தது யார்? என நவ்ஜோத் சிங் சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சிலர்தான்  காரணம், அதற்காக பாகிஸ்தான் முழுவதையும் பழி சொல்வது நியாயமா? என்று பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து பேசியது பெரும் சர்ச்சையாகியது. சித்துவை விமர்சனம் செய்து டுவிட்டரில் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் கோபம் அடைந்த சித்து  1999-ல் கந்தகாரில் மசூத் அசாரை விடுதலை செய்தது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய சித்து, பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள முடியாது. புல்வாமாவில் கொடூரமான குற்றத்தை நடத்தியவர்களுக்கு பின்னால் இருப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும். கேள்வியொன்றை கேட்க நான் விரும்புகிறேன். 1999-ல் கந்தகாரில் பயங்கரவாதிகளை (மசூத் அசார் உள்பட) விடுதலை செய்தது யார்? அதற்கு யார் பொறுப்பு? ஏன் ராணுவ வீரர்கள் உயிரிழக்க வேண்டும்? இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வு ஏன் கிடையாது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பில் கோஷ்டி மோதலை தீர்த்து வைக்க காஷ்மீர் வந்த பயங்கரவாதி மசூத் அசாரை 1995-ல் இந்திய பாதுகாப்பு படை கைது செய்தது. இதனையடுத்து 1999-ம் ஆண்டு நேபாளத்தில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது இந்திய அரசால் அவன் விடுவிக்கப்பட்டான். 180 பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் பயங்கரவாதிகள் மூவரை விடுதலை செய்ய அப்போதைய வாஜ்பாய் அரசு சம்மதம் தெரிவித்தது. இதனையடுத்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை தொடங்கிய மசூத் அசார், இந்தியாவிற்கு பெரும் சவாலாக எழுந்துள்ளான் என கூறினார்.

Next Story