புல்வாமா தாக்குதல்: சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தால் தான் தேசப்பற்றுள்ளவர்களா? சானியா மிர்சா கோபம்


புல்வாமா தாக்குதல்: சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தால் தான் தேசப்பற்றுள்ளவர்களா? சானியா மிர்சா கோபம்
x
தினத்தந்தி 18 Feb 2019 11:12 AM GMT (Updated: 2019-02-18T16:42:56+05:30)

புல்வாமா தாக்குதல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் முழுக்க கண்டனம் தெரிவித்தால் மட்டும் தான் பிரபலங்களாகிய நாங்கள் தேசப்பற்றுள்ளவர்களா? என சானியா மிர்சா கூறி உள்ளார்.

ஐதராபாத்,

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர்.  இந்த கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக டுவிட் ஒன்றை வெளியிட்டார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. எனினும் அதில் ஏன் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்கிற எதிர்வினைகளை எதிர்கொண்டார். இதையடுத்து தன்னை விமர்சனம் செய்பவர்களுக்கு சானியா மிர்சா டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறி  இருப்பதாவது:-

இந்த தாக்குதலுக்கு சமூகவலைத்தளங்களில் முழுக்க கண்டனம் தெரிவித்தால் மட்டும்தான் பிரபலங்களாகிய நாங்கள் தேசப்பற்றுள்ளவர்கள், நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கமுடியும் என்று எண்ணுபவர்களுக்காக இதை எழுதுகிறேன். நாங்கள் பிரபலங்கள், ஆனால் உங்களில் சிலர் வெறுப்புக்கு ஆளாகியுள்ள மனிதர்கள், உங்கள் கோபத்தை எங்கு வெளிப்படுத்துவது என தெரியாமல் இப்படி வெறுப்பை பரப்புகிறீர்களா?

தீவிரவாதத் தாக்குதலுக்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் அல்லது சமூகவலைத்தளங்களில் உரக்கக் குரல் எழுப்பி நாங்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. கண்டிப்பாக நாங்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள் தான், தீவிரவாதத்தை பரப்புபவர்களுக்கும். சரியான மனநிலையில் உள்ள எவரும் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள் தான். அப்படி அவர்கள் இல்லையென்றால் அது அவர்களுடைய பிரச்சினை. என் நாட்டுக்காக நான் விளையாடுகிறேன், வியர்வை சிந்துகிறேன், என் நாட்டுக்காக அவ்வாறு பங்களிப்பை செலுத்துகிறேன்.

பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் பக்கம் நான் நிற்கிறேன். அவர்களுக்காக மனம் வருந்துகிறேன். நாட்டைக் காப்பாற்றும் அவர்கள் நம்முடைய நிஜக்கதாநாயகர்கள். பிப்ரவரி 14 இந்தியாவுக்கு கருப்புத் தினமாகும். அதுபோன்ற இன்னொரு தினத்தை நாம் காணக்கூடாது என எண்ணுகிறேன். எவ்விதமான இரங்கல்களும் இதற்கு போதாது. இந்த நாளை மறக்கமுடியாது, அதேபோல மன்னிக்கவும் முடியாது. நான் இப்போதும் அமைதிக்காகத்தான் வேண்டுகிறேன். நீங்களும் வெறுப்பை பரப்புவதற்கு பதிலாக அதை செய்ய வேண்டும். உபயோகமாக ஒன்றைச் செய்வதற்குத்தான் கோபம் நல்லது. நபர்களைக் கிண்டலடிப்பதால் நீங்கள் ஒன்றும் அடையப்போவதில்லை. இந்த உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை, இடமிருக்கப் போவதில்லை.

உட்காந்து கொண்டு பிரபலங்கள் இந்தக் கொடுமையான சம்பவத்துக்கு எதிராக எத்தனை பதிவுகள் எழுதியுள்ளார்கள் என சபித்துக்கொண்டும், மதிப்பீடு செய்வதை விடவும் நாட்டுக்காக எப்படி சேவை செய்ய முடியும் என்பதற்கான வழிகளைக் காணுங்கள். சிறிய அளவிலாவது ஏதாவது செய்யுங்கள், நாங்கள் அதை சமூகவலைத்தளங்களில் அறிவிக்காமல் செய்து கொண்டிருக்கிறோம் என்று ஆவேசமாகத் தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை 2010-ல் திருமணம் செய்தார் சானியா மிர்சா. 32 வயதான சானியா மிர்சா இறுதியாக கடந்த 2017 அக்டோபர் மாதம் சீன ஓபன் போட்டியில் ஆடினார். அப்போது கால்மூட்டில் காயமுற்றதால், ஓராண்டுக்கு மேலாக ஆட முடியவில்லை. மேலும் கடந்த 2018 அக்டோபர் மாதம் சானியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் தீவிரமாக டென்னிஸ் ஆட்டத்தில் கவனத்தை செலுத்த அவர் முடிவு செய்துள்ளார்.

Next Story