மோடி மீண்டும் பிரதமராக 83 சதவீதம் பேர் ஆதரவு - கருத்து கணிப்பில் தகவல்


மோடி மீண்டும் பிரதமராக 83 சதவீதம் பேர் ஆதரவு -  கருத்து கணிப்பில் தகவல்
x
தினத்தந்தி 21 Feb 2019 6:43 AM GMT (Updated: 2019-02-21T12:13:28+05:30)

மோடி மீண்டும் பிரதமராக 83 சதவீதம் பேர் ஆதரவு என கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

பிரபல ஆங்கில நாளிதழ் சுமார் 2 லட்சம் பேரிடம் நடத்திய மெகா கருத்து கணிப்பில் பிரமதர் மோடிக்கு ஆதரவு பெருகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சுமார் 2 லட்சம் பேரிடம் ஆன்லைன் மூலம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. 9 மொழிகளில் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதற்கு சுமார் 2 லட்சம் பேர் ஆன்லைனிலேயே பதில் அளித்தனர்.

இந்த கருத்து கணிப்பில் பாராளுமன்ற தேர்தலில் சிறந்த ஆட்சியை தருவது யார் என்று கேட்கப்பட்டிருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மோடி அரசின் செயல்பாடுகள் சிறப்பானவை அல்லது மிகவும் சிறப்பானவை என மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏழை எளிய மக்களுக்குப் போய் சேரும் வகையில் நலத்திட்டங்களை அறிவித்திருப்பதும் மோடி அரசின் வெற்றிக்கு காரணமாக கருதப்படுகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் வேலைவாய்ப்புகள் பிரச்சினைதான் முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்றும் வாக்காளர்கள் கூறியுள்ளனர். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2-வது இடத்தில் உள்ளார். அவருக்கு 8.33 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு 1.44 சதவீதம் பேரும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு 0.43 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 5.9 சதவீதம் பேர் மற்ற தலைவர்கள் பிரதமராக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதா என்ற கேள்விக்கு ராகுல் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக 31 சதவீதம் பேரும், அதிகரிக்கவில்லை என்று 63 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அல்லாத அரசு அமைய வேண்டும் என்று 3.47 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

5 வருடம் நடந்துள்ள மோடி ஆட்சி மிகவும் நன்று என 59.51 சதவீதம் பேரும், நன்று என 22.29 சதவீதம் பேரும், பரவாயில்லை என 8.25 சதவீதம் பேரும், மோசம் என்று 9.9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story