ஜம்மு ஜெயிலில் உள்ள 7 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை டெல்லி திகார் சிறைக்கு மாற்றவேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் காஷ்மீர் அரசு வழக்கு


ஜம்மு ஜெயிலில் உள்ள 7 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை டெல்லி திகார் சிறைக்கு மாற்றவேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் காஷ்மீர் அரசு வழக்கு
x
தினத்தந்தி 22 Feb 2019 9:23 PM GMT (Updated: 2019-02-23T02:53:20+05:30)

ஜம்மு ஜெயிலில் உள்ள 7 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை டெல்லி திகார் சிறைக்கு மாற்றவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் காஷ்மீர் அரசு நேற்று வழக்கு தொடர்ந்தது.

புதுடெல்லி,

காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கைதான பாகிஸ்தானின் லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 7 பேர் ஜம்மு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஜெயிலில் உள்ள உள்ளூர் கைதிகளை மூளைசலவை செய்து வருவதாகவும் எனவே அவர்களை பாதுகாப்பு மிக்க டெல்லி திகார் ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி காஷ்மீர் அரசு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எல்.என்.ராவ் மற்றும் எம்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது காஷ்மீர் அரசின் நிலைக்குழுவை சேர்ந்த சோயிப் ஆலம் கூறுகையில் ‘பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகளை ஜம்மு ஜெயிலில் இருந்து வேறு சிறைகளுக்கு மாற்றவேண்டிய கட்டாய தேவை உள்ளது. அவர்கள் உள்ளூர் கைதிகளை மூளைசலவை செய்து வருகிறார்கள். எனவே அவர்களை திகார் ஜெயிலுக்கு மாற்றாவிட்டாலும், அரியானா, பஞ்சாப் ஜெயில்களுக்காவது மாற்றம் வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பயங்கரவாதிகள் 7 பேரை வேறு ஜெயிலுக்கு மாற்றுவது குறித்து மாநில அரசு அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

புலவாமா தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் காஷ்மீர் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story