ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புக்கு தடை


ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புக்கு தடை
x
தினத்தந்தி 1 March 2019 3:16 PM IST (Updated: 1 March 2019 3:16 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஜமாத்-இ-இஸ்லாமி ஜம்மு அன்ட் காஷ்மீர் அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

புதுடெல்லி,

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டபின், ஜம்மு காஷ்மீரில் போலீஸார் பிரிவினைவாத கட்சியின் தலைவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் ஏறக்குறைய 100 பேர் கைது  செய்யப்பட்டனர். அதில் ஜமாத்- இ-இஸ்லாமி அமைப்பின் அப்துல் ஹமிது பியாஸ், செய்தித்தொடர்பாளர் ஜாஹித் அலி ஆகியோரும் அடங்குவர்.

ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு கடந்த காலங்களில் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி கடந்த 1990-களில் தடை செய்யப்பட்டு பின்னர் 1995-ம் ஆண்டு தடை நீக்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், ஜமாத்-இ -இஸ்லாமி ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கும், தீவிரவாத அமைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், மாநிலத்தில் பிரிவினைவாத செயல்களை தூண்டிவிடுவதிலும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக் குழுவில் இந்த அமைப்புக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், "ஜம்மு காஷ்மீரில்  செயல்பட்டு வந்த ஜாமாத்-இ-இஸ்லாமி ஜம்மு அன்ட் காஷ்மீர் அமைப்பு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் தடை செய்யப்படுகிறது. தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் ஜமாத் -இ -இஸ்லாமி அமைப்பு இருப்பதும், தீவிரவாத செயல்களுக்கு உதவி செய்வதும், மாநிலத்தில் பிரிவினையைத் தூண்டிவிடவும் முயல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த தேசத்தில் பிரிவினைக்கு முயன்று, தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளுடன் கைகோர்த்துச் செயல்படுகிறது. இதனால், மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஆதலால், ஜமாத் -இ-இஸ்லாமி அமைப்பை தடை செய்கிறோம் " எனத் தெரிவிக்கப்பட்டது.

Next Story