மகாத்மா காந்தி கொல்லப்பட்டது குறித்து மறுவிசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
மகாத்மா காந்தி கொல்லப்பட்டடது குறித்து மறு விசாரணை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். டெல்லியில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற காந்தியை நாதுராம் கோட்சே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி மாவட்ட நீதிமன்றம் 1949-ம் ஆண்டு நவம்பர் 8 அன்று கோட்சேவுக்கு மரண தண்டணை விதித்தது. கோட்சேவுக்கு உதவிய நாராயண் அப்தேவுக்கும் மரணதண்டணை வழங்கப்பட்டது. இருவரும் அம்பாலா சிறையில் 1949- நவம்பர் 15 -அன்று தூக்கிலிடப்பட்டனர்.
இந்த வழக்கு முடிவடைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி மும்பையைச் சேர்ந்த பங்கஜ் பத்னீஸ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். காந்தி கொலை வழக்கு விசாரணையில் பல குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகவும், எனவே இவ்வழக்கை மறு விசாரணை செய்ய உத்தரவிடகோரியும் பங்கஜ் தனது மனுவில் வலியுறுத்தி இருந்தார். மேலும், காந்தியின் உடலில் நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும், கோட்சே மூன்று குண்டுகளை மட்டுமே சுட்டார் என்றும் அந்த நான்காவது குண்டை சுட்டது யார் என்பது குறித்து தெரிய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.என்.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு எந்த ஒரு அடிப்படை காரணத்தையும் நாங்கள் கண்டறியவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story