பேராசிரியரை முழங்கால் போட வைத்த மாணவர்கள்; சாப்பிடாமல், பேசாமல் அழுத பெற்றோர்


பேராசிரியரை முழங்கால் போட வைத்த மாணவர்கள்; சாப்பிடாமல், பேசாமல் அழுத பெற்றோர்
x
தினத்தந்தி 5 March 2019 10:10 PM IST (Updated: 5 March 2019 10:10 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரி விரிவுரையாளரை மாணவர்கள் முழங்கால் போட செய்த சம்பவத்தினால் அவரது பெற்றோர் சாப்பிடாமல், பேசாமல் அழுதுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகாவில் உள்ள ஹலகாட்டி பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருபவர் சந்தீப் வாத்தர்.  பாகிஸ்தான் எல்லை பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா வான்வழி தாக்குதல் நடத்திய பின்னர் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதற்றத்திற்கு இவர் கண்டனம் தெரிவித்து தனது முகநூலில் பதிவிட்டு உள்ளார்.

இதேபோன்று இந்திய விமானி அபிநந்தன் வர்தமானை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை புகழ்ந்தும் அவர் பதிவிட்டு உள்ளார்.  போர் சூழலை உருவாக்கி வரும் வலதுசாரி குழுக்களுக்கு அவர் கண்டனமும் தெரிவித்து உள்ளார்.

இதனை அடுத்து அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் விரிவுரையாளர் பணிபுரியும் கல்லூரிக்குள் புகுந்து அவரை முழங்கால் போடும்படி கூறியுள்ளனர்.  கைகளை கூப்பி, தலை வணங்கி மன்னிப்பு கேட்கும்படியும் வலியுறுத்தினர்.

இதுபற்றி கூறிய வாத்தர், அவர்களில் ஒரு சிலர் என்னுடைய மாணவர்கள்.  அவர்களின் பெயர்களை நான் மறந்து விட்டேன்.  எனது பதிவில் ஆட்சேபனைக்கு உரிய விசயம் எது என்பது எனக்கு தெரியவில்லை.  எனது பதிவில் இருந்த விசயங்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.  அவர்கள் மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தினார்கள்.  எனது பதிவை அழிக்கவும் வற்புறுத்தினர் என தெரிவித்து உள்ளார்.

இந்த செயலால் அவர் அதிர்ச்சி அடையவில்லை என கூறியுள்ளார்.  ஆனால் அவரது பெற்றோர் நாள் முழுவதும் எதுவும் பேசாமல், சாப்பிடாமல் அழுதுள்ளனர்.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

Next Story