இந்திய விமானப்படை தாக்குதலில் எத்தனை பேர் இறந்தனர் என்று ஓரிரு நாளில் தெரியும் - காங்கிரசுக்கு ராஜ்நாத்சிங் பதில்


இந்திய விமானப்படை தாக்குதலில் எத்தனை பேர் இறந்தனர் என்று ஓரிரு நாளில் தெரியும் - காங்கிரசுக்கு ராஜ்நாத்சிங் பதில்
x
தினத்தந்தி 6 March 2019 4:45 AM IST (Updated: 6 March 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

இந்திய விமானப்படை தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது ஓரிரு நாளில் தெரியும் என்று காங்கிரசுக்கு ராஜ்நாத்சிங் பதில் அளித்தார்.

கவுகாத்தி,

பாகிஸ்தானில் பாலகோட் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பலியான பயங்கரவாதிகள் எண்ணிக்கை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகின. இதனால், பலியானோர் எண்ணிக்கையை பிரதமர் கூற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இதற்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பதில் அளித்துள் ளார். அசாம் மாநிலம் துப்ரியில் எல்லைப்புற திட்டம் ஒன்றை நேற்று தொடங்கி வைத்த அவர், பொதுமக்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சில கட்சிகளின் தலைவர்கள், நமது விமானப்படை நடத்திய தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் பலியானார்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை ஓரிரு நாளில் தெரியும். எத்தனைபேர் இறந்தனர் என்பது பாகிஸ்தான் தலைவர்களின் மனசாட்சிக்கு தெரியும்.

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு, தாக்குதலுக்கு முன்பு, பாலகோட் முகாமில் சுமார் 300 செல்போன்கள் இயங்கிக் கொண்டிருந்ததாக கூறுகிறது. அந்த செல்போன்களை மரங்களா பயன்படுத்தின? அந்த அமைப்பு சொல்வதையும் நம்ப மாட்டீர்களா?

எத்தனை பேர் இறந்தனர்? எத்தனை பேர் இறந்தனர்? என்று கேட்கிறார்கள். தாக்குதல் முடிந்தவுடன், ஒன்று, இரண்டு, மூன்று என்று விமானப்படை எண்ணிக் கொண்டிருக்க வேண்டுமா? என்ன ஜோக் இது?

ஆட்சி அமைக்கும் நோக்கத்தில் மட்டும் அரசியல் செய்யக்கூடாது. தேசத்தை கட்டமைப்பதற்காக அரசியல் செய்ய வேண்டும்.

பலியான பயங்கரவாதிகள் எண்ணிக்கையை தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் நண்பர்கள் கருதினால், அவர்களுக்கு நான் ஒரு யோசனை சொல்கிறேன். பாகிஸ்தானுக்கு போய், சடலங்களை நீங்களே எண்ணி பார்த்துக் கொள்ளுங்கள்.

அங்குள்ளவர்களை பார்த்து, எத்தனை பேர் இறந்தனர் என்று கேட்டுக்கொள்ளுங்கள். இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.


Next Story