பாகிஸ்தானியர்களுக்கான விசா காலம் 3 மாதமாக குறைப்பு: அமெரிக்கா நடவடிக்கை


பாகிஸ்தானியர்களுக்கான விசா காலம் 3 மாதமாக குறைப்பு: அமெரிக்கா நடவடிக்கை
x
தினத்தந்தி 6 March 2019 12:17 PM IST (Updated: 6 March 2019 12:17 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானியர்களுக்கான விசா காலத்தை 3 மாதமாக குறைத்து அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

வாஷிங்டன்,

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானிற்கு  அழுத்தம் கொடுத்து வருகின்றன. பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. 

இதற்கிடையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமெரிக்கா வழங்கிய எப்16 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் இந்திய விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தியதாக அமெரிக்காவிடம் இந்தியா புகார் அளித்துள்ளது. இதற்கான ஆதாரங்களையும் அமெரிக்காவிடம் இந்தியா வழங்கி உள்ளது.

இதனால், பல வழிகளிலும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு  மேலும் நெருக்கடியாக அமெரிக்கா விசா கட்டுப்பாட்டை விதித்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு 5 ஆண்டுகள் வரை முன்பு விசா வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 3 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டு பத்திரிகையாளர்களுக்கும் இனிமேல் 3 மாதங்கள் வரை மட்டுமே விசா வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதேபோல் விசா பெறுவதற்கான கட்டணத்தையும் 160 டாலரில் இருந்து 192 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.  

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்கா கடும் கட்டுப்பாட்டை விதித்ததையடுத்து பதில் நடவடிக்கையாக பாகிஸ்தான், அமெரிக்க குடிமக்களுக்கு விசா கட்டணத்தை உயர்த்தியதோடு, விசாவுக்கான கால அளவையும் குறைத்தது. இதற்கு பதில் நடவடிக்கையாகவே, அமெரிக்க விசா கெடுபிடிகளை அறிவித்துள்ளதாக தெரிகிறது. 

முன்னதாக, கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், தூதரக அலுவலகத்தை விட்டு 40 கி.மீட்டர் தொலைவுக்கு மேல் செல்ல வேண்டும் என்றால், முன் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்று அமெரிக்கா கட்டுப்பாடு கொண்டு வந்தது. 

Next Story