இந்தியாவில் சுற்றுச்சூழல் சீர்கேடு; வோல்க்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ.500 கோடி அபராதம்
இந்தியாவில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுத்தியதற்காக வோல்க்ஸ்வேகன் நிறுவனத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.500 கோடி அபராதம் விதித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் சுற்றுச்சூழலை சீர்கெடுக்கும் வகையிலான கருவிகளை கொண்ட கார்களை விற்பனை செய்துள்ளது என வோல்க்ஸ்வேகன் வாகன தயாரிப்பு நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுவரை வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் இந்தியாவில் 3.23 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இந்த கார்களில் உள்ள மோசடி கருவியானது, டீசல் என்ஜின்களில் இருந்து காற்று வெளியேறும் அளவை குறைத்து காட்டி உலக அளவில் காரின் செயல்திறனை உயர்த்தி காட்டும் வகையிலான சாப்ட்வேராக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்த வாகனங்களால் டெல்லியில் காற்று சீர்கேடு ஏற்பட்டு ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என கூறப்பட்டது. இதனால் விதிகளை மீறிய வோல்க்ஸ்வேகன் வாகன விற்பனைக்கு தடை விதிக்கும்படி பள்ளி ஆசிரியர் உள்பட சிலர் வழக்கு போட்டனர்.
இதனை தொடர்ந்து சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தியது பற்றிய விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 16ல் உத்தரவு ஒன்று பிறப்பித்து இருந்தது. இதில் வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி தொகையை இடைக்கால தொகையாக செலுத்தும்படி நீதிபதி ஆதர்ஷ் குமார் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டு இருந்தது.
இதுபற்றிய வழக்கு விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இதில், இந்தியாவில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுத்தியதற்காக வோல்க்ஸ்வேகன் நிறுவனத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.500 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது. இந்த தொகையை 2 மாதங்களில் செலுத்தும்படியும் உத்தரவிட்டு உள்ளது.
Related Tags :
Next Story