ஜம்முவில் கையெறி குண்டு வீச்சு: பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு


ஜம்முவில் கையெறி குண்டு வீச்சு: பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு
x
தினத்தந்தி 8 March 2019 8:55 AM IST (Updated: 8 March 2019 8:55 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறி குண்டு வீசப்பட்டதில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் குளிர்கால தலைநகரான ஜம்முவில் இயங்கி வரும் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். நேற்று நண்பகலில் இந்த பஸ் நிலையத்துக்கு வந்த மர்ம நபர் ஒருவர், கையெறி குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பி ஓடினார். இந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் சில அரசு பஸ்களும், பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளும் சிக்கிக்கொண்டனர். இதனால் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பும், குழப்பமும் ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் தங்கள் உயிரை காத்துக்கொள்வதற்காக அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 33 பேர் காயமடைந்தனர். மேலும் பஸ் ஒன்றும் பெருத்த சேதமடைந்தது.

இந்த பயங்கர சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் பஸ் நிலையத்துக்கு விரைந்தனர். பின்னர் அங்கு காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி முகமது ஷாரிக் என்ற 17 வயது வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.  

இந்த நிலையில், குண்டு வெடிப்பில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதன்மூலம், இந்த தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. 

கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்திய  யாசிர் அகமது என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த அவர், அந்த இயக்கத்தின் தூண்டுதலின் பேரில் இந்த சதிச்செயலில் ஈடுபட்டதாக அவர் கூறினார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


Next Story