புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி - மத்திய அரசு அறிவிப்பு


புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி - மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 8 March 2019 4:52 PM IST (Updated: 8 March 2019 5:57 PM IST)
t-max-icont-min-icon

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி  வீரா்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதி வெடிமருந்துகளை நிரப்பிய வாகனத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தினான். இதில் 40 துணை ராணுவ படை வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது. 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தருகிற வகையில் இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த 26-ந் தேதி பாகிஸ்தானுக்கு போய் பயங்கரவாத முகாம்களை லேசர் குண்டுகள் போட்டு அழித்தன.

இதற்கு பழிவாங்கும் விதமாக மறுநாளில் (27-ந் தேதி) பாகிஸ்தானின் ‘எப்-16’ ரக அதிநவீன போர் விமானங்கள் காஷ்மீரில் புகுந்தன. ஆனால் இந்திய விமானப்படையினர் ‘மிக்-21’ ரக போர் விமானங்களில் சென்று அவற்றை விரட்டியடித்தனர். 

ஒரு விமானத்தை இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். இதன்மூலம் ‘எப்-16’ ரக விமானம் ஒன்றை, வான்மோதலில் முதன்முதலாக வீழ்த்திய இந்திய விமானப்படை விமானி என்ற பெயரை அவர் தட்டிச்செல்கிறார்.

இந்த நடவடிக்கையின்போது இந்திய போர் விமானம் ஒன்று, பாகிஸ்தான் தாக்குதலுக்கு ஆளாகி, அதில் இருந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தான் படையிடம் சிக்கினார். 3 நாட்களுக்கு பின்னர் அபிநந்தன் வெள்ளிக்கிழமை (1-ந் தேதி) இரவு விடுதலை செய்யப்பட்டு, இந்தியாவிடம் வாகா எல்லையில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அபிநந்தன் உடனடியாக டெல்லிக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு ராணுவத்தின் ஆர்.ஆர். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

ராணுவ வீரர்கள் உயிரிழந்ததால் மத்திய அரசு வழங்கும் நிதியில் ரூ.35 லட்சம் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்துகள் பணிக்காக தொகை, காப்பீடு, வீரதீர செயல்களுக்கான நிதி ஆகியவற்றை சேர்த்து ரூ.1.01கோடி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story