இரட்டை இலை சின்னம் மேல்முறையீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 15-ந் தேதி விசாரணை


இரட்டை இலை சின்னம் மேல்முறையீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 15-ந் தேதி விசாரணை
x
தினத்தந்தி 12 March 2019 4:00 AM IST (Updated: 12 March 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 15-ந் தேதி விசாரணைக்கு வரு கிறது.

புதுடெல்லி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து டெல்லி ஐகோர்ட்டு கடந்த மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது.

டெல்லி ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பிப்ரவரி 28-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி, ஓ,பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் மற்றும் அ.இ.அ.தி.மு.க. கட்சி பெயரை வழங்கி தேர்தல் கமிஷன் 2017-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு முடிவடையும் வரை இரட்டை இலை சின்னத்தை யாரும் பயன்படுத்தாமல் முடக்கிவைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் சசிகலா, டி.டி.வி.தினகரன் அணியினருக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அமர்வு முன்பு சசிகலா, டி.டிவி.தினகரன் தரப்பில் வக்கீல்கள் அமித் ஆனந்த், ராஜா செந்தூர்பாண்டி ஆகியோர் ஆஜராகி, நாடாளுமன்றத்துக்கும் மற்றும் தமிழ்நாட்டில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பிரஷர் குக்கர் சின்னத்தை யாருக்கும் வழங்காமல் தற்காலிகமாக டெல்லி ஐகோர்ட்டு முடக்கி வைத்த கெடு வருகிற 14-ந் தேதியுடன் முடிவடைவதாகவும், எனவே தங்கள் மேல்முறையீட்டு வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் முறையிட்டனர்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜராகி இருந்த மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆட்சேபணை தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், டி.டி.வி.தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.


Next Story