2019 தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட மாட்டார் என தகவல்
2019 தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி உள்ளன. ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளும் பெரும்பாலும் தொகுதி பங்கீடுகள் செய்துள்ளன. எந்த கட்சி, எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது தொடர்பாக சில ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் ஏற்கனவே தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். இந்த ஆண்டு அவருடன் பிரியங்கா காந்தியும் முழுநேர அரசியலில் ஈடுபட்டு இருக்கிறார். உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு அந்த மாநிலத்தில் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. முதல் பட்டியலில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் ரேபரேலியில் சோனியா காந்தியும், அமேதியில் ராகுல் காந்தியும் மீண்டும் போட்டியிடுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரியங்கா காந்தி முதல் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை. பின்னர் வரும் பட்டியல்களில் அவருடைய பெயர் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 2019 தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்தவே பிரியங்கா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். எனவே, தேர்தலில் போட்டியிட மாட்டார் என கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.
Related Tags :
Next Story