தேசத்தின் அனைத்து தவறுகளையும் உங்கள் குடும்பத்தார் செய்துள்ளனர்- ராகுல்காந்திக்கு பாஜக பதிலடி


தேசத்தின் அனைத்து தவறுகளையும் உங்கள் குடும்பத்தார் செய்துள்ளனர்- ராகுல்காந்திக்கு பாஜக பதிலடி
x
தினத்தந்தி 14 March 2019 1:28 PM IST (Updated: 14 March 2019 1:28 PM IST)
t-max-icont-min-icon

தேசத்தின் அனைத்து தவறுகளையும் உங்கள் குடும்பத்தார் செய்துள்ளனர். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா வெல்லும் என்பதை உறுதியாக கூறுகிறோம் என பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

புதுடெல்லி 

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை போட்டதைக் கண்டிக்காத பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்திருந்த நிலையில், அதற்கு, சீனாவுக்கு ஐ.நா.வில் இடம் பெற்றுக்கொடுத்ததே உங்களின் கொள்ளுத்தாத்தா தான் என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

புல்வாமாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் பலியானதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் கடைசி நேரத்தில் சீனா தலையிட்டு அதற்கு முட்டுக்கட்டை போட்டது.

இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் காந்தி, ட்விட்டரில்," பலவீனமான பிரதமர் மோடி, சீன அதிபரைக் கண்டு அஞ்சுகிறார். ஊஞ்சலில் ஆடுவது, டெல்லியில் கட்டிப்பிடிப்பது, சீனாவுக்குப் பணிவது ஆகியவைதான் சீனாவுக்கான மோடியின் ராஜதந்திரமா" என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதில் அளித்து பாஜக சார்பில் ட்விட்டரில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதில், " உங்கள் கொள்ளுத்தாத்தா மட்டும் ஐ.நா.வில் சீனாவுக்கு இடத்தைப் பரிசாகத் தராமல் இருந்திருந்தால், சீனா ஐ.நா.வில் இடம் பெற்றிருக்காது. தேசத்தின் அனைத்து தவறுகளையும் உங்கள் குடும்பத்தார் செய்துள்ளனர். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா வெல்லும் என்பதை உறுதியாக கூறுகிறோம்.

இந்த விவகாரத்தை பிரதமர் மோடியிடம் விட்டுவிட்டு சீனத் தூதுவர்களுடன் ரகசியமாக நீங்கள் நட்பு பாராட்டுங்கள்" என பதிலடி தரப்பட்டுள்ளது.


Next Story