பா.ஜனதாவில் இணைந்த டாம் வடக்கன் ஒன்றும் பெரிய தலைவர் கிடையாது - ராகுல் காந்தி
சோனியாவின் முன்னாள் அரசியல் செயலாளரும், காங்கிரஸ் தலைவருமான டாம் வடக்கன் பா.ஜனதாவில் இணைந்தார்.
புதுடெல்லி,
கேரளாவின் திருச்சூரை சேர்ந்த காங்கிரஸ் தலைவர், டாம் வடக்கன். கத்தோலிக்க கிறிஸ்தவரான இவர் காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வந்தார். சோனியாவுக்கு மிக நெருக்கமாக இருந்த டாம் வடக்கன், அவரது அரசியல் செயலாளராகவும் இருந்துள்ளார். இவ்வாறு காங்கிரசின் முன்னணி தலைவராக இருந்த டாம் வடக்கன், திடீரென பா.ஜனதாவில் இணைந்தார். டெல்லியில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் தன்னை பா.ஜனதாவில் இணைத்துக் கொண்டார். பின்னர் கட்சித்தலைவர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார்.
காங்கிரசில் இருந்து விலகியது குறித்து டாம் வடக்கன் கூறுகையில், ‘பாகிஸ்தானின் பாலகோட்டில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய படையினரின் நேர்மை குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியதால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். நமது மண்ணில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு காங்கிரசின் எதிர்வினை உண்மையில் கவலைக்குரியது’ என்று கூறினார்.
பா.ஜனதாவில் இணைந்த டாம் வடக்கனுக்கு நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் போட்டியிட ‘சீட்’ வழங்கப்படும் என தெரிகிறது. அதேநேரம் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் மூத்த தலைவர் ஒருவர் காங்கிரசை விட்டு வெளியேறியது அந்த கட்சிக்கு பெருத்த பின்னடைவாக இருக்கும் என கூறப்பட்டது. 20 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்த வடக்கன் பா.ஜனதாவிற்கு தாவியது அதிர்ச்சியளிக்கும் நகர்வாக உள்ளது.
வடக்கன் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், வடக்கன்? இல்லை, இல்லை, வடக்கன் பெரிய தலைவர் கிடையாது என பதில் அளித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் வடக்கன் விலகல் தொடர்பாக முக்கியத்துவம் கொடுக்காத ராகுல் காந்தி, மோடி அரசுக்கு எதிராக மூன்று விஷயங்களை முன்னெடுக்கிறோம். மிகப்பெரிய பிரச்சினை வேலைவாய்ப்பின்மை, மோடியின் தோல்வி. இரண்டாவது பிரச்சினை ஊழல். ரபேல் பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கும். மூன்றாவது விவகாரம் விவசாயிகள் பிரச்சினையென்று பதிலளித்துள்ளார்.
Related Tags :
Next Story