எம்.எல்.ஏ. மறைவால் பா.ஜனதா அரசு பெரும்பான்மை இழந்ததா? கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியது


எம்.எல்.ஏ. மறைவால் பா.ஜனதா அரசு பெரும்பான்மை இழந்ததா? கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியது
x
தினத்தந்தி 17 March 2019 4:30 AM IST (Updated: 17 March 2019 4:01 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா எம்.எல்.ஏ. மறைவால் மனோகர் பாரிக்கர் அரசு பெரும்பான்மை இழந்ததாக கூறி, கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியது.

பனாஜி,

கோவா மாநிலத்தில் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், பா.ஜனதாவுக்கு 14 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 16 எம்.எல்.ஏ.க்களும் இருந்தனர். இதர கட்சிகள் மற்றும் சுயேச்சை ஆதரவுடன் பா.ஜனதா அரசு நடந்து வருகிறது.

இதற்கிடையே, காங்கிரசை சேர்ந்த சுபாஷ் சிரோத்கர், தயானந்த் சோப்டே ஆகியோர் பா.ஜனதாவுக்கு தாவினர். தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அத்துடன், பா.ஜனதா எம்.எல்.ஏ. பிரான்சிஸ் டிசவுசா காலமானார். இதனால், காங்கிரசின் பலம் 14 ஆகவும், பா.ஜனதாவின் பலம் 13 ஆகவும் குறைந்தது. காலியாக உள்ள 3 இடங்களுக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 23-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில், கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோரியுள்ளது. இதுகுறித்து கோவா கவர்னர் மிருதுளா சின்காவுக்கு அம்மாநில எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான சந்திரகாந்த் கவ்லேகர் நேற்று கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதா எம்.எல்.ஏ. மறைவைத் தொடர்ந்து, மனோகர் பாரிக்கர் அரசு, மக்களின் நம்பிக்கையை இழந்ததுடன், சட்டசபை பெரும்பான்மையையும் இழந்துள்ளது. எனவே, மனோகர் பாரிக்கர் அரசை கலைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பெரும்பான்மை இழந்த அரசை ஒரு கணம் கூட பதவியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது.

அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட தனிக்கட்சியான காங்கிரசை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். எங்களுக்கு பெரும்பான்மையும் உள்ளது. அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட தனிக்கட்சியை ஆட்சியமைக்க அழைப்பதுதான் அரசியல் சட்ட கடமை ஆகும்.

இதை மீறினாலோ அல்லது மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முயன்றாலோ அது ஜனநாயக விரோதமும், சட்ட விரோதமும் ஆகும். அந்த முயற்சியை கடுமையாக எதிர்ப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story