3 மாதங்களில் 149 கட்சிகள் பதிவு: இந்தியாவில் 2,293 அரசியல் கட்சிகள் - தேர்தல் கமிஷன் தகவல்
ஜனநாயக நாடான இந்தியாவில் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. அதுமட்டுமின்றி சாதி, மதம், மொழி, இனம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து தொடர்ந்து புதிய கட்சிகளும் உருவாகி வருகின்றன.
புதுடெல்லி,
சில கட்சிகள் தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்றும், பல கட்சிகள் அங்கீகாரம் பெறாமலும் இயங்கி வருகின்றன.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மொத்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது. அதன்படி சிறியதும், பெரியதுமாக 2,293 கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இவற்றில் 7 கட்சிகள் தேசிய கட்சிகளாக அங்கீகாரம் பெற்று உள்ளன. இதைப்போல 59 கட்சிகள் மாநில கட்சிகளாக தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை பெற்று இருக்கின்றன. மீதமுள்ள கட்சிகள் பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக மட்டும் இருக்கின்றன.
இந்த 2,293 கட்சிகளில் 149 கட்சிகள் கடந்த 3 மாதங்களில் பதிவு பெற்ற கட்சிகள் ஆகும். தேர்தலை முன்னிட்டு உருவான இவற்றில் தமிழகத்தின் புதிய தலைமுறை மக்களின் கட்சி உள்ளிட்ட பல சிறிய கட்சிகள் அடங்கி உள்ளன. தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெறாத இந்த கட்சிகள் தேர்தலில் பொது சின்னங்களில் மட்டுமே போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.