ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.667 கோடி சொத்து : 5 ஆண்டுகளில் 3 மடங்குக்கு மேல் உயர்வு
ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு ரூ.667 கோடி. 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 3 மடங்குக்கு மேலாக பெருகி உள்ளது.
அமராவதி,
இந்திய நாட்டிலேயே பணக்கார முதல்-மந்திரி என்ற பெயரை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பெற்றுள்ளார்.
கடந்த 2014–ம் ஆண்டு ஆந்திர சட்டசபை தேர்தலின்போது குப்பம் தொகுதியில் அவர் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குடும்ப சொத்தின் மதிப்பு ரூ.177 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது அவர் குப்பம் சட்டசபை தொகுதியில் வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் 2017–18 நிதி ஆண்டில் வருமானம் ரூ.64 லட்சத்து 73 ஆயிரத்து 203 என குறிப்பிட்டுள்ளார். கார் உள்ளிட்ட அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.47 லட்சத்து 38 ஆயிரத்து 67 என்று கூறி இருக்கிறார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ. 19 கோடியே 96 லட்சத்து 95 ஆயிரத்து 474 கோடி அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரிக்கு ரூ.648 கோடியே 13 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தில் உள்ள பங்குகளின் மதிப்பு மட்டுமே ரூ.545 கோடியே 77 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இருவரது சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.667 கோடி ஆகும்.
கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மனைவி சொத்து மதிப்பு 3 மடங்குக்கு மேலாக பெருகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரபாபு நாயுடு மகன் நர லோகேஷ் மங்களகிரி நாடாளுமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தனது வேட்புமனுவில் தந்தை சந்திரபாபு நாயுடுவின் பெயரை கணவர் என குறிப்பிட்டுள்ளார்.
இதே தவறை சந்திரபாபு நாயுடுவும் குப்பம் சட்டசபை தொகுதி வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் தனது தந்தை கர்ஜூரா நாயுடு பெயரை கணவர் என்ற இடத்தில் குறிப்பிட்டார்.
இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.