தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பெண்களுக்கான 8 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன; அப்சரா ரெட்டி


தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பெண்களுக்கான 8 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன; அப்சரா ரெட்டி
x
தினத்தந்தி 2 April 2019 5:05 PM IST (Updated: 2 April 2019 5:05 PM IST)
t-max-icont-min-icon

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பெண்களுக்கான 8 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன என திருநங்கை அப்சரா ரெட்டி கூறியுள்ளார்.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்று உள்ளது.  அக்கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.  இவற்றில் புதுச்சேரி தொகுதியும் ஒன்று.

இங்கு போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் வைத்திலிங்கம் மற்றும் தி.மு.க.வின் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோருக்கு ஆதரவாக அகில இந்திய மஹிளா காங்கிரஸ் பொது செயலாளர் அப்சரா ரெட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவர் திறந்த வேனில் பயணித்தபடி, தட்டாஞ்சாவடி, நெல்லித்தோப்பு மற்றும் உழவர்கரை ஆகிய இடங்களில் மதியம்வரை பிரசாரம் மேற்கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லை.  பெண்களுக்கான 8 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன என கூறினார்.

தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் வீடு காட்பாடி காந்திநகரில் உள்ளது.  இவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். தினமும் மகனுக்கு ஆதரவாக துரைமுருகன் பல்வேறு இடங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 29ந்தேதி பிரசாரம் முடிந்து இரவில் வீடு திரும்பினார்.  அங்கு வருமானவரி துறையினர் அவரது வீட்டிற்கு சோதனை நடத்த சென்றனர்.  இதற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதன்பின் அதிகாலை 3 மணியளவில் வருமானவரி சோதனை நடந்தது.

இதேபோன்று அவரது மகன் மற்றும் வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளரான கதிர் ஆனந்தின் பள்ளி மற்றும் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதுபற்றி பேசிய அப்சரா, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது.  தேர்தலில் போட்டியிடும் அவரது மகன் வெற்றி பெற கூடாது என்பதற்காக இந்த சோதனை நடந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

Next Story