எங்களை அரசியல்ரீதியாக ஏற்காதவர்கள் தேச விரோதிகள் அல்ல எல்.கே.அத்வானி கருத்து


எங்களை அரசியல்ரீதியாக ஏற்காதவர்கள் தேச விரோதிகள் அல்ல எல்.கே.அத்வானி கருத்து
x
தினத்தந்தி 4 April 2019 11:00 PM GMT (Updated: 4 April 2019 8:34 PM GMT)

எங்களை அரசியல்ரீதியாக ஏற்காதவர்கள் எதிரிகளோ, தேச விரோதிகளோ அல்ல, எதிர்ப்பாளர்கள் மட்டுமே என்று பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நீண்டகாலம் கட்சி தலைவராக பணியாற்றியவருமான 91 வயதாகும் எல்.கே.அத்வானிக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோர் இந்த பொதுத்தேர்தலில் தேச பாதுகாப்பை ஒரு முக்கிய கொள்கையாக பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் அரசியல் போட்டியாளர்களை பாகிஸ்தானியர்கள் என்பதுபோல் இந்தியாவின் எதிரிகள் என்ற கருத்தில் விமர்சித்து வருகிறார்கள். அதேபோல பல பா.ஜனதா தலைவர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களை தேச விரோதிகள் என்பதுபோல பேசிவருகிறார்கள்.

அத்வானி கருத்து

இந்த நிலையில் எல்.கே.அத்வானி பாரதீய ஜனதா கட்சியின் நிறுவன தினத்தையொட்டி (ஏப்ரல் 6) சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

‘முதலில் தேசம், அடுத்து கட்சி, இறுதியாகத் தான் நான்’ இது தான் எனது வாழ்க்கையில் நான் கடைபிடிக்கும் கொள்கை.

இந்திய ஜனநாயகத்தின் உண்மையான பொருள் என்னவென்றால் பன்முகத்தன்மைக்கு மரியாதை அளிப்பதும், கருத்து சுதந்திரமும் தான். ஆரம்பத்தில் இருந்தே பா.ஜனதா அரசியல் ரீதியாக எங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை நமது எதிரிகளாக கருதுவதில்லை. அவர்கள் நமது எதிர்ப்பாளர்கள் மட்டுமே.

அதேபோல, இந்திய தேசியவாதத்தில் அரசியல் ரீதியாக நம்மை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தேச விரோதிகள் என்றும் நாம் ஒருபோதும் கருதுவதில்லை. பா.ஜனதா கட்சி ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட மற்றும் அரசியல் அளவிலான கருத்து சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எல்.கே.அத்வானி 5 ஆண்டு களுக்கு பின்னர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி பதில்

அத்வானி கருத்து வெளியிட்ட சில மணி நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அதற்கு பதில் அளித்துள்ளார்.

அதில், “அத்வானி பாரதீய ஜனதா கட்சியின் உண்மையான கருத்தை மிகச்சரியாக கூறியுள்ளார். அதில் முதலில் தேசம், கட்சி அடுத்தது, இறுதியாக நாம் என்ற வழிகாட்டும் மந்திரம் மிகவும் முக்கியமானது. பா.ஜனதா கட்சியின் செயல்வீரராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். எல்.கே.அத்வானி போன்றவர்களின் வாழ்த்து மேலும் அதனை வலுப்படுத்தும் என்பதிலும் பெருமை கொள்கிறேன்” என்று மோடி கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி

மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் எல்.கே.அத்வானியின் கருத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதில் அவர், “மூத்த அரசியல்வாதியும், முன்னாள் துணை பிரதமரும், பா.ஜ.க. நிறுவன தலைவருமான எல்.கே.அத்வானியின் ஜனநாயக பண்புகள் பற்றிய விரிவான கருத்து குறிப்பிடத்தக்கது” என்று கூறியுள்ளார்.

Next Story